கந்துவட்டி கும்பல் உடன் தொடர்பா.? - கருணாகரன் மறுப்பு

தினமலர்  தினமலர்
கந்துவட்டி கும்பல் உடன் தொடர்பா.?  கருணாகரன் மறுப்பு

பொதுநலன் கருதி படம் தொடர்பாக அதில் நடித்த கருணாகரன் மற்றும் இயக்குநர் சீயோன், தயாரிப்பாளர் இடையே மோதல் நடந்து வருகிறது. கருணாகரன் கொலை மிரட்டல் விடுவதாக சீயோனும், தயாரிப்பாளரும் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். ஆனால் இதை கருணாகரன் மறுத்து வந்தார்.

இந்நிலையில் தன்னை பற்றி இவர்கள் கூறும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து, கருணாகரன் விளக்கம் கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :

பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணை தயாரிப்பாளர் என்னை பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை. படத்தின் இசை வெளியீடு பிப்., 4ம் தேதி நடப்பதாக சொல்லி, பிப்.,1ம் தேதி இரவு 9மணக்கு அழைத்தனர். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கி வைக்க முடியவில்லை. பிப்.,8ம் தேதி தான் சென்னை வந்தேன். நான் வேண்டுமென்றே நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று குறை சொல்கிறார்கள்.

மர்ம நபர்களை வைத்து நான் தாக்க முற்பட்டதாகவும், கந்துவட்டி கும்பலை வைத்து இயக்குநரை போனில் மிரட்டியதாகவும் புகார் கொடுத்துள்ளனர். எனக்கும், கந்துவட்டி கும்பலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் எள்ளளவும் உண்மையில்லை. நான் அப்படி வளரவில்லை. எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர்.

கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்து கொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மூலக்கதை