திருத்தணி 12வது வார்டில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: எம்எல்ஏவிடம் மக்கள் மனு

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருத்தணி 12வது வார்டில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: எம்எல்ஏவிடம் மக்கள் மனு

திருத்தணி: திருத்தணி நகராட்சியின் 12-வது வார்டில் குடிநீர் பிரச்னையை தீர்க்க, மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க தொகுதி எம்எல்ஏவிடம் மக்கள் வலியுறுத்தி மனு அளித்தனர். திருத்தணி நகராட்சியில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன.

இதில் 12வது வார்டான ராமலிங்கம் போண்டா தெரு, பழைய தர்மராஜா கோவில் தெரு, கண்ணபிரான் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது இப்பகுதியில் கடும் குடிநீர் வறட்சி நிலவி வருகிறது. இதனால் நகராட்சி மூலம் 2 நாட்களுக்கு ஒருமுறை டிராக்டர்களில் வரும் குடிநீரையே மக்கள் நம்பியிருக்கும் அவலநிலை உள்ளது.

தங்கள் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைத்து, அவற்றை சேமிக்க ஒரு மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி கட்ட வேண்டும் என திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், நேற்று திருத்தணி தொகுதி பி. எம். நரசிம்மனை சந்தித்து, தங்கள் பகுதி குடிநீர் பிரச்னையை தீர்க்க ஆழ்துளை கிணறுடன் கூடிய புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டி தர கோரி இப்பகுதி மக்கள் மனு அளித்து வலியுறுத்தினர்.

அதற்கான இடம் தேர்வு செய்து, விரைவில் குடிநீர் தொட்டி கட்டுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என எம்எல்ஏ நரசிம்மன் உறுதி கூறினார்.

.

மூலக்கதை