ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதே தூத்துக்குடி மக்களின் விருப்பம் : தமிழக அரசின் எழுத்துப் பூர்வ வாதம் தாக்கல்

தினகரன்  தினகரன்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதே தூத்துக்குடி மக்களின் விருப்பம் : தமிழக அரசின் எழுத்துப் பூர்வ வாதம் தாக்கல்

டெல்லி : ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கூடாது என்பதே தூத்துக்குடி மக்களின் விருப்பம் என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப் பூர்வமாக வாதத்தை தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலை வழக்கு ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொது மக்கள் நடத்திய போராட்டத்தில் 13 பேர் பலியானதை தொடர்ந்து ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. இதனை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.    ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தேசிய பசுமை தீர்பாயம் வழங்கிய உத்தரவிற்கு எதிராக தமிழக அரசு மற்றும் வேதாந்தா நிறுவனம் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக சவாலான வாதங்களை முன்வைப்பு இதனிடையே நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன் மற்றும் நவீன் சின்கா ஆகியோர் அமர்வில் கடந்த வாரம் இறுதி கட்ட விசாரணை நடந்தது. அப்போது வேதாந்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அரிமா சுந்தரம் வாதத்தில் ,தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் சுமார் ரூ.15ஆயிரம் கோடிக்கு மேல் ஆலை நிர்வாகத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது என வாதிட்டார்.   இதையடுத்து தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், விஸ்வநாதன் மற்றும் குருகிருஷ்ணகுமார் ஆகியோர் வாதத்தில்,”ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியதற்கு எதிராக ஆலை நிர்வாகம் உயர்நீதிமன்றத்தில் தான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும். அதைவிடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கு வந்திருக்க கூடாது. இந்த வழக்கை விசாரிப்பதற்கு தீர்ப்பாயத்திற்கு அதிகாரம் கிடையாது. மேலும் ஆலையால் பாதிப்பு இல்லை என்றால் நிலத்தடி நீர், குடிநீர், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகியவை நிகழ்ந்தது எப்படி?இதற்கு வேதாந்தா நிர்வாகத்தால் பதிலளிக்கவோ நிரூபிக்கவோ முடியுமா?. மேலும் தேசிய பசுமை தீர்ப்பாயம் என்பது நடுவர் மன்றம் ஒன்றும் கிடையாது என வேதாந்தா நிறுவனத்திற்கு எதிராக சவாலான வாதங்களை முன்வைத்தனர்.எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் இதையடுத்து நீதிபதிகள் மேற்கண்ட வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து விட்டது என்றும், மேலும் வேறு ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பும் பட்சத்தில் அனைத்து தரப்பும் வரும் 11ம் தேதிக்குள் தங்களின் எழுத்துப்பூர்வ வாதங்களை அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என உத்தரவிட்டனர். இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் எழுத்துப்பூர்வ வாதத்தை உச்சநீதிமன்றத்தில், தமிழக அரசு இன்று தாக்கல் செய்துள்ளது. அதில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கக் கூடாது என்பதே தூத்துக்குடி மக்களின் விருப்பம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு நீதி கிடைக்குமா என்பது தீர்ப்பின் போது தெரிந்துவிடும்.

மூலக்கதை