செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர் விடுதியில் திடீர் தீ

தமிழ் முரசு  தமிழ் முரசு
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர் விடுதியில் திடீர் தீ

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டர்கள் விடுதியில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது.

இந்த கல்லூரி வளாகத்தில், மருத்துவ கல்லூரி, செவிலியர் பள்ளி-கல்லூரி, பாரா மெடிக்கல் உள்ளன. இது தவிர, ஆண், பெண் டாக்டர்களுக்கான தங்கும் விடுதி, செவிலியர்களுக்கான தங்கும் விடுதி மற்றும் ஊழியர்களுக்கான விடுதி என தனித்தனியாக உள்ளன.

இந்நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் தயாராகி கொண்டிருந்தனர். திடீரென ஆண் டாக்டர்கள் தங்கியிருந்த விடுதியின் ஒரு அறையில் இருந்து திடீரென தீப்பிடித்தது.

சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவ ஆரம்பித்தது. இதை பார்த்ததும் டாக்டர்கள் அலறியடித்து வெளியே ஓடினர்.

தகவல் அறிந்து செங்கல்பட்டு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

செங்கல்பட்டு டவுன் போலீசாரும் விரைந்தனர். தீயணைப்பு படை வீரர்கள், தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர்.

சுமார் அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில், துணிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்ததாக தெரிகிறது.

இந்த சம்பவம் பற்றி கேள்விபட்டதும், மருத்துவமனை டீன் உஷா சதாசிவன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். போலீசாரும் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

இதில் ஒரு டாக்டர், சட்டையை அயர்ன் செய்யும்போது, தீ விபத்து ஏற்பட்டதாக தெரியவந்தது.

தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

.

மூலக்கதை