நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிப்பு...

தினகரன்  தினகரன்
நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவது கண்டுபிடிப்பு...

டெல்லி: நாட்டில் செயல்பட்டு வரும் 24 போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக்குழு வெளியிட்டுள்ளது. உத்திரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் அதிகளவில் போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து பல்கலைக்கழக மானியக்குழு நடத்திய ஆய்வில் நாட்டில் 24 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்திரப்பிரதேசத்தில் 8 போலி பல்கலைகழகங்கள் செயல்படுவது தெரிய வந்துள்ளது. அடுத்ததாக டெல்லியில் 7  போலி பல்கலைக்கழகங்களும், மேற்குவங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும் செயல்படுகின்றன. பீகார், கர்நாடகம், கேரளா, மகாராஷ்ட்டிரா , புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் தலா ஒரு போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் இந்திய திட்டமிடல், மேலாண்மை கல்வி நிறுவனம் (ஐ.ஐ.பி.எம்.), என்ற பெயரிலும், மேற்கு வங்காள மாநிலம் நாதியாவில் உயிரி ரசாயன கல்வி மானிய கமிஷன் என்ற பெயரிலும் போலி பல்கலைக்கழகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மீது பல்கலைக்கழக மானியக்குழு யு.ஜி.சி. கடும் நடவடிக்கையை தொடங்கி உள்ளது. போலீசில் புகார் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதை போல பிற மாநிலங்களில் செயல்பட்டு வரும் போலி பல்கலைக்கழகங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டின் தொடக்கத்திலும் பல்கலைக்கழக மானியக்குழு போலி பல்கலைக்கழகங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டு அவற்றில் சேர வேண்டாம் என மாணவ, மாணவிகளைக் கேட்டு வந்தும் அவற்றில் மாணவர்கள் சேருவதால்தான் அவை தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது

மூலக்கதை