கட்சி பொறுப்பேற்றபின் முதல் முறையாக லக்னோவில் நடைபெறும் பரப்புரையில் பங்கேற்கிறார் பிரியங்கா காந்தி

தினகரன்  தினகரன்
கட்சி பொறுப்பேற்றபின் முதல் முறையாக லக்னோவில் நடைபெறும் பரப்புரையில் பங்கேற்கிறார் பிரியங்கா காந்தி

லக்னோ : காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற நிலையில் பிரியங்கா காந்தி இன்று உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோ சென்று தொண்டர்களின் கருத்துக்களை கேட்டறிகிறார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரியான பிரியங்கா காந்திக்கு உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதிப் பொது செயலாளர் பொறுப்பை வழங்கினார். இதையடுத்து சகோதரர் ராகுல் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச பொதுச் செயலாளர்  ஜோதிராதித்தியா சிந்தியா ஆகியோருடன் பிரியங்கா காந்தி இன்று லக்னோ செல்கிறார். தனது பயணம் தொடர்பாக ஆடியோ செய்தியை வெளியிட்டுள்ள பிரியங்கா காந்தி, இளைஞர்களுக்கும் சமூகத்தில் பின் தங்கியவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். வாருங்கள் புதிய அரசியலையும் புது யுகத்தையும் கட்டமைப்போம் என்று அதில் தெரிவித்துள்ளார். கட்சி அலுவலகத்தில் காலை 11 மணி தொண்டர்களை சந்திக்கும் பிரியங்கா, பிப்ரவரி 14ம் தேதி வரை அங்கு தங்கியிருந்து 42 மக்களவைத் தொகுதி நிர்வாகிகளையும் சந்திப்பார் என தெரிகிறது. பிரியங்கா காந்தியின் வருகையை முன்னிட்டு விமான நிலையம் முதல் காங்கிரஸ் கட்சி அலுவலகம் வரை அவரை வரவேற்று பல்வேறு இடங்களில் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி அலுவலகமும் முழு வீச்சில் சீரமைக்கப்பட்டுள்ளது.   போலி மது உயிரிழப்பு பிரியங்கா வேதனை:உத்தரப்பிரதேசம், உத்தரகாண்டில் போலி மதுபானம் குடித்ததால் சுமார் 60 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவங்களுக்கு கிழக்கு உத்தரப்பிரதேச காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம்  தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசத்தில் போலி மதுபானம் குடித்ததால் 100க்கும் மேற்பட்டோர் இறந்துள்ள செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும்  அடைந்தேன். பாஜ அரசு இது போன்ற மரணங்களுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு  நிவாரணமும்,  அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும்’ என்று  கூறியுள்ளார்.

மூலக்கதை