ரஜினி எதை விரும்புகிறார்?: ரகசியம் உடைக்கும் இயக்குநர்

தினமலர்  தினமலர்
ரஜினி எதை விரும்புகிறார்?: ரகசியம் உடைக்கும் இயக்குநர்

கடந்த மாதம் 10ல் பொங்கல் ரிலீசாக வெளியான ரஜினியின் பிரம்மாண்ட படமான பேட்ட படத்தை இயக்கியவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். இதற்கு முன், அவர் ரஜினியை வைத்து இயக்கியதில்லை. இதனால், ரஜினியின் நடிப்பு குறித்து என்ன சொல்கிறீர்கள்? என்ற கேள்வியை, கார்த்திக் சுப்புராஜிடம் பத்திரிகையாளர்கள் கேட்டு வருகின்றனர்.

இதே கேள்வியை சமீபத்தில் தனியார் டி.வி., ஒன்றுக்கு கார்த்திக் சுப்புராஜ் பேட்டியளித்த போதும் கேட்டனர். அதற்கு கார்த்திக் சுப்புராஜ் கூறியிருப்பதாவது:

ரஜினி, காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகளை மிகவும் ரசித்து நடிக்கிறார். இதுபோன்ற காட்சிகளில் அவர் நடிப்பும், எனர்ஜி லெவலும் வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. அவர் காமெடி - ரொமான்ஸ் திரைப்படங்களில் நடிப்பதை அதிகம் விரும்புகிறார். இதை அவரிடம் பழகி, பேசியதில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். காட்சிகளை விளக்கும் போது, கூர்ந்து கவனித்துக் கொள்கிறார். அதை அப்படியே தனக்குள் கற்பனையாக யோசித்துப் பார்க்கிறார். பின், கேமரா முன் நடிக்க வருகிறார். இதனால், பெரும்பாலான காட்சிகளை, ஒரே டேக்கில் முடித்து விடுகிறார். அவர், அதைத்தான் விரும்புகிறார்.

தேவையில்லாமல், நடிப்பு என்ற பெயரில், நேரத்தையும், பலருடைய உழைப்பையும் அவர் வீணடிக்க விரும்புவதில்லை. எதை செய்கிறோமோ, அதை நேர்த்தியாக செய்ய வேண்டும் என்பது ரஜினியின் இயல்பாக இருக்கிறது. என்னைப் பொறுத்த வரை, ரஜினி ஒரு சிறந்த நடிகர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மூலக்கதை