4 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

தினகரன்  தினகரன்
4 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

ஹாமில்டன்: இந்திய அணியுடன் நடந்த பரபரப்பான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 4 ரன் வித்தியாசத்தில் வென்ற நியூசிலாந்து 2-1 என்ற கணக்கில்  தொடரை கைப்பற்றியது.நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி, முதலில் விளையாடிய ஒருநாள் போட்டித் தொடரில் 4-1 என்ற கணக்கில் அபாரமாக வென்று சாதனை  படைத்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதின. வெலிங்டனில் நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து 80 ரன் வித்தியாசத்தில்  வென்று முன்னிலை பெற்றது.ஆக்லாந்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுக்க, 1-1 என சமநிலை ஏற்பட்டது.  நியூசிலாந்து மண்ணில் முதல்  முறையாக டி20 போட்டியில் வெற்றி பெற்ற  இந்திய அணி, தொடரையும் கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்புடன் 3வது மற்றும் கடைசி போட்டியை  எதிர்கொண்டது. ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசியது. சாஹலுக்கு பதிலாக குல்தீப் இடம்  பெற்றார். நியூசி. அணியில் பெர்குசனுக்கு ஓய்வளிக்கப்பட்டு, பிளேர் டிக்னர் அறிமுகமானார். தொடக்க வீரர்களாக செய்பெர்ட், கோலின் மன்றோ களமிறங்கினர்.  பவுண்டரியும் சிக்சருமாகப் பறக்கவிட்ட இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.3 ஓவரில் 80 ரன் சேர்த்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர்.செய்பெர்ட் 43 ரன் (25 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி குல்தீப் சுழலில் டோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங்கில் ஆட்டமிழந்தார். அடுத்து மன்றோ - கேப்டன்  வில்லியம்சன் இணை 2வது விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்தது. 28 பந்தில் அரை சதம் அடித்த மன்றோ, 72 ரன் (40 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசி குல்தீப் பந்துவீச்சில்  ஹர்திக் வசம் பிடிபட்டார்.கேன் வில்லியம்சன் 27 ரன், கிராண்ட்ஹோம் 30 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். கடைசி கட்டத்தில் டாரில் மிட்செல், ராஸ் டெய்லர் அதிரடியில் இறங்க,  நியூசிலாந்து 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன் குவித்தது. டாரில் 19 ரன், டெய்லர் 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்திய பந்துவீச்சில்  குல்தீப் 2, புவனேஷ்வர், கலீல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 213 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தவான், கேப்டன் ரோகித் இருவரும் துரத்தலை  தொடங்கினர். தவான் 5 ரன் மட்டுமே எடுத்து சான்ட்னர் பந்துவீச்சில் டாரில் வசம் கேட்ச் கொடுத்து வெளியேற, ரோகித் - விஜய் ஷங்கர் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 75 ரன்  சேர்த்து நம்பிக்கை அளித்தது. விஜய் ஷங்கர் 43 ரன் (28 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினார். அடுத்து ரோகித்துடன் இணைந்த இளம் வீரர் ரிஷப் பன்ட்  அதிரடியில் இறங்க, இந்திய ஸ்கோர் வேகம் எடுத்தது.பன்ட் 28 ரன் (12 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ரோகித் 38 ரன் (32 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்டியா 21 ரன் (11 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்),  டோனி 2 ரன் (4 பந்து) எடுத்து ஆட்டமிழக்க, இந்தியா 15.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் எடுத்து தடுமாறியது. 28 பந்தில் 68 ரன் தேவைப்பட்ட நிலையில், தினேஷ்  கார்த்திக் - குருணல் பாண்டியா ஜோடி உறுதியுடன் போராடியதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.கடைசி ஓவரில் 16 ரன் தேவை என்ற நிலையில், டிம் சவுத்தீ பந்துவீசினார். முதல் பந்தில் 2 ரன் எடுத்த கார்த்திக், அடுத்த 2 பந்தில் ரன் ஏதும் எடுக்காமல்  ஏமாற்றமளித்தார். 3வது பந்தில் ஒரு ரன் எடுப்பதற்காக வேகமாக ஓடிவந்த குருணல் பாண்டியாவையும் திருப்பி அனுப்பியது நெருக்கடியை அதிகரித்தது. 4வது  மற்றும் 5வது பந்தில் தலா 1 ரன் மட்டுமே கிடைத்தது. கடைசி பந்து வைடு ஆக அமைய, கூடுதலாக வீசப்பட்ட பந்தை சிக்சருக்கு தூக்கினார் கார்த்திக். எனினும், இந்தியா  20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன் எடுத்து 4 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.கார்த்திக் 33 ரன் (16 பந்து, 4 சிக்சர்), குருணல் 26 ரன்னுடன் (13 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசி. பந்துவீச்சில் சான்ட்னர், டாரில் தலா  2, குகலெஜின், டிக்னர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். நியூசிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது. கோலின் மன்றோ ஆட்ட நாயகன் விருதும், டிம் செய்பெர்ட் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.

மூலக்கதை