இந்திய அணிக்கு 213 ரன்கள் இலக்கு

தினமலர்  தினமலர்
இந்திய அணிக்கு 213 ரன்கள் இலக்கு

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது 'டுவென்டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மன்ரோ அரை சதம் கடந்தார்.





நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி மூன்று 'டுவென்டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலிரண்டு போட்டிகள் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி போட்டி ஹாமில்டனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் பவுலிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சகாலுக்குப்பதில் குல்தீப் இடம்பிடித்தார். நியூசிலாந்து அணியில் பெர்குசனுக்குப்பதில் வேகப்பந்துவீச்சாளர் பிளயர் டிக்னெர் அறிமுக வாய்ப்பு பெற்றார்.




மன்ரோ அரை சதம்

நியூசிலாந்து அணிக்கு டிம் செய்பெர்ட், மன்ரோ ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. புவனேஷ்வர் பந்தை மன்ரோ சிக்சருக்கு பறக்கவிட்டார். கலீல் அகமது பந்துவீச்சில் செய்பெர்ட் இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார். குல்தீப் 'சுழலில்' செய்பெர்ட் (43) ஆட்டமிழந்தார். அபாரமாக விளையாடிய மன்ரோ அரை சதம் கடந்தார். இவர் 72 ரன்களில் குல்தீப்பிடம் சிக்கினார். கலீல் 'வேகத்தில்' கேப்டன் வில்லியம்சன் (27) அவுட்டானார்.




மூன்று பவுண்டரி விளாசிய கிராண்ட்ஹோம் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். நியூசிலாந்து அணி 20 ஒவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் எடுத்தது. மிட்சல் (19), ராஸ் டெய்லர் (14) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 2 விக்கெட் வீழ்த்தினார்.

மூலக்கதை