ஆசிய-பசிபிக் விளையாட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ஆளுநர் பாராட்டு

தினகரன்  தினகரன்
ஆசியபசிபிக் விளையாட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு ஆளுநர் பாராட்டு

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கான ஆசிய-பசிபிக் விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தமிழக ஆளுநர் பதக்கம் வழங்கி  பாராட்டினார். மெட்ராஸ் வெஸ்ட் ரவுண்டு-10 அமைப்பும், மாற்றுதிறனாளிகளுக்கான இந்திய சிறப்பு ஒலிம்பிக் குழுவும் இணைந்து ஒருங்கிணைந்த  ஆசிய-பசிபிக் அளவிலான சிறப்பு ஒலிம்பிக் போட்டிகளை  சென்னையில் நடத்துகின்றன. இதில் இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூடான் நாடுகளை சேர்ந்த சிறப்புத் திறனுள்ள 1500 பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர். நேரு விளையாட்டு அரங்கில் கடந்த 2 நாட்களாக நடந்து வரும் இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ‘விளையாட்டு  உடலை மட்டுமின்றி மனதையும் வலுவாக்குகிறது. ஒருங்கிணைந்து செயல்படும் மனப்பான்மையை உருவாக்குகிறது. வெற்றி, தோல்வி குறித்து உண்மையான விளையாட்டு வீரன் கவலைப்படமாட்டான்.  மீண்டும் வெற்றிக்காக உழைக்க ஆரம்பித்து விடுவான். அது மாற்றுத்திறனாளி உட்பட அனைத்து  விளையாட்டு வீரர்களுக்கும் பொருந்தும். மாற்றுத்திறனாளியாக இருப்பதை தடையாகக் கருதாமல் சாதித்த விளையாட்டு வீரர்கள் பலர் இருக்கின்றனர்’ என்றார்.பேட்மின்டன் போட்டியில் வென்ற  வங்கதேசம், இந்தியா, நேபாள வீரர்களுக்கு பதங்களை அணிவித்து பாராட்டினார். நீச்சல் போட்டியில் தேசிய சாம்பியனான தமிழகத்தைச் சேர்ந்த ஆர்த்திக்கு,  சர்வதேச போட்டியில் பங்கேற்பதற்கான  சீருடையை வழங்கியதுடன் மார்ச் மாதம் அபுதாபியில் நடைபெற உள்ள சர்வதேச சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய  அணியினருக்கு வாழ்த்து தெரிவித்தார். சிறப்பு ஒலிம்பிக் போட்டிகள் இன்று மாலையுடன் நிறைவு பெறுகின்றன.

மூலக்கதை