நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: ஹாமில்டனில் இன்று கடைசி போட்டி

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து மண்ணில் முதல் முறையாக டி20 தொடரை வெல்ல இந்தியா முனைப்பு: ஹாமில்டனில் இன்று கடைசி போட்டி

ஹாமில்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டி20 போட்டி, செடான் பார்க் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 12.30க்கு தொடங்குகிறது.ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளைக் குவித்த இந்திய அணி, அங்கிருந்து நியூசிலாந்து சென்று ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகிறது.  முதலில் நடந்த ஒருநாள் போட்டித் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்து வெலிங்டனில் நடந்த முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணி 90 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று முன்னிலை பெற்றது. ஆக்லாந்தில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 7  விக்கெட் வித்தியாசத்தில் வென்று பதிலடி கொடுக்க, சமநிலை ஏற்பட்டது. நியூசிலாந்து மணில் விளையாடிய டி20 போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெற்றதில்லை என்ற சோக வரலாற்றுக்கு  முற்றுப்புள்ளி வைத்த இந்தியா, இன்று நடைபெறும் கடைசி டி20 போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்குகிறது.கேப்டன் ரோகித், தவான், பன்ட், டோனி, ஷங்கர் என்று பேட்ஸ்மேன்கள் அனைவருமே நல்ல பார்மில் உள்ளனர். கடந்த போட்டியில் குருணல் பாண்டியா, கலீல் அகமது சிறப்பாக செயல்பட்டு  பந்துவீச்சுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளனர். ஹாமில்டனில் நடந்த 4வது ஒருநாள் போட்டியில் 92 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்ததற்கு, டி20ல் பழிதீர்ப்பதுடன் தொடரையும் வெல்ல  இந்திய வீரர்கள் உறுதியுடன் உள்ளனர்.அதே சமயம், ஒருநாள் போட்டித் தொடரில் 1-4 என்ற கணக்கில் மோசமான தோல்வியை சந்தித்த நியூசிலாந்து, 2-1 என டி20 தொடரை வென்று பதிலடி கொடுக்கும் உத்வேகத்துடன்  களமிறங்குகிறது. கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இருவரும் கணிசமாக ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டுவதால்,  ஆட்டம் மிக சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.இந்தியா: ரோகித் ஷர்மா (கேப்டன்), ஷிகர் தவான், ரிஷப் பன்ட், தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், எம்.எஸ்.டோனி, குருணல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜ்வேந்திர சாஹல் புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவுல், கலீல் அகமது, ஷுப்மான் கில், விஜய் ஷங்கர், முகமது சிராஜ்.நியூசிலாந்து: கேன் வில்லியம்சன் (கேப்டன்), டக் பிரேஸ்வெல், கோலின் டி கிராண்ட்ஹோம், லோக்கி பெர்குசன், ஸ்காட் குகலெஜின், கோலின் மன்றோ, டாரில் மிட்செல், டிம் செய்பெர்ட்,  மிட்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, டிம் சவுத்தீ, ராஸ் டெய்லர், பிளேர் டிக்னர், ஜேம்ஸ் நீஷம்.

மூலக்கதை