பாஞ்ச்சால் 206, பரத் 142 ரன் விளாசல் இந்தியா ஏ 540/6 டிக்ளேர்

தினகரன்  தினகரன்
பாஞ்ச்சால் 206, பரத் 142 ரன் விளாசல் இந்தியா ஏ 540/6 டிக்ளேர்

வயநாடு: இங்கிலாந்து லயன்ஸ் அணியுடனான முதல் டெஸ்டில் (4 நாள் போட்டி), இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 540 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.வயநாடு, கிரிஷ்ணகிரி ஸ்டேடியத்தில் நடைபெற்று வரும் இப்போட்டியில், டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து லயன்ஸ் முதல் இன்னிங்சில் 340 ரன் குவித்து  ஆல் அவுட்டானது. டக்கெட் 80, சான் ஹெய்ன் 61, ஸ்டீவன் முல்லானி 42, வில் ஜாக்ஸ் 63 ரன் விளாச, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இந்தியா ஏ பந்துவீச்சில் நவ்தீப் சாய்னி 5, ஷர்துல் தாகூர் 2, ஆவேஷ் கான், ஜலஜ் சக்சேனா, ஷாபாஸ் நதீம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 219 ரன் எடுத்திருந்தது. ஈஸ்வரன் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். கே.எல்.ராகுல் 88,  பிரியங்க் பாஞ்ச்சால் 89 ரன்னுடன் நேற்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ராகுல் மேற்கொண்டு 1 ரன் மட்டுமே சேர்த்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் பாவ்னே டக்  அவுட்டானார். ரிக்கி புயி 16 ரன்னில் வெளியேற, பாஞ்ச்சால் - கர் பரத் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 196 ரன் சேர்த்தது.பாஞ்ச்சால் 206 ரன் (313 பந்து, 26 பவுண்டரி, 3 சிக்சர்), பரத் 142 ரன் (139 பந்து, 11 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். இந்தியா ஏ அணி 6 விக்கெட் இழப்புக்கு 540 ரன் என்ற ஸ்கோருடன் முதல்  இன்னிங்சை டிக்ளேர் செய்தது. சக்சேனா 28, தாகூர் 12 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து,200 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து  லயன்ஸ் 3ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 20 ரன் எடுத்துள்ளது.இன்று கடைசி நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

மூலக்கதை