உயரே செல்லும் உருக்கு விலை

தினமலர்  தினமலர்
உயரே செல்லும் உருக்கு விலை

புதுடில்லி:உருக்கு விலையை விரைவில் அதிகரிக்க, பெரிய உருக்கு நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. சமீப காலமாகவே உருக்கு விலை அதிகரித்து வரும் நிலையில், மேலும் விலையை அதிகரிப்பது குறித்து, இந்நிறுவனங்கள் ஆலோசித்து வருகின்றன.


இது குறித்து, உருக்கு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கூறியதாவது:பல நிறுவனங்கள், விலை அதிகரிப்புக்கு தயாராகி வருகின்றன. ஏற்கனவே, ஜெ.எஸ்.டபுள்யு., ஸ்டீல் நிறுவனம், டன் ஒன்றுக்கு, 750 ரூபாய் அதிகரித்துள்ளது.எச்.ஆர்.சி., உருக்கு டன் ஒன்றுக்கு, 42 ஆயிரம் முதல், 44 ஆயிரம் ரூபாய் என்ற நிலைக்கு ஜனவரி முடிவில் நகர்ந்து விட்டது.இன்னொரு நிறுவனமான, ஜெ.எஸ்.பி.எல்., மற்றவர்கள் விலை ஏற்றினால் தானும் விலை ஏற்ற தயாராக இருக்கிறது.


சர்வதேச சந்தையை பொறுத்தவரை, இரும்பு தாது விலை அதிகரிப்பால், கடந்த, 10 நாட்களில் உருக்கின் விலை, டன்னுக்கு, 70 டாலர் வரை அதிகரித்துள்ளது. இது, மேலும் அதிகரிக்கக் கூடும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.இந்த விலையேற்றம் குறித்து, ’செய்ல்’ நிறுவனத்தின் தலைவர், ஏ.கே.சவுத்ரி கூறியதாவது:விலை குறைவான உருக்கு இறக்குமதி பாதிப்பை ஏற்படுத்த ஒரு காரணமாக இருக்கிறது. இடு பொருட்கள் விலையும் அதிகரித்திருப்பதால், உருக்கு விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை