எதுவும் தெரியாத, ‘ஆடிட்டர்’ 5 ஆண்டு தொழில் புரிய தடை

தினமலர்  தினமலர்
எதுவும் தெரியாத, ‘ஆடிட்டர்’ 5 ஆண்டு தொழில் புரிய தடை

மும்பை:ஒரு நிறுவனம் குறித்து எதுவுமே தெரியாமல், அதன் நிதி நிலை அறிக்கையை தணிக்கை செய்ததாக சான்றளித்த, ‘ஆடிட்டர்’ முகேஷ் சோக்சி என்பவருக்கு, தொழில் புரிய, ஐந்தாண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.


மஹாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த, ‘ஜென் ஷேவிங்’ நிறுவனம், 1996ல், புதிய பங்கு வெளியீட்டில் களமிறங்கி, முதலீட்டாளர்களின் பணத்துடன் மாயமாகி விட்டது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் நிதி நிலவரத்தை தணிக்கை செய்த, ஆடிட்டர் முகேஷ் சோக்சியிடம், மத்திய நிறுவன விவகாரங்கள் துறை விசாரணை நடத்தியது.


அப்போது, ஜென் ஷேவிங் என்ன செய்கிறது என்பதே தனக்கு தெரியாது என்றும், அந்நிறுவனம் தயாரித்து கொடுத்த நிதி நிலை அறிக்கைக்கு, ஆடிட்டர் என்ற முறையில் கையெழுத்திட்டு சான்றளித்ததாக, முகேஷ் சோக்சி தெரிவித்தார்.


இதையடுத்து, ஜென் ஷேவிங் மற்றும் முகேஷ் சோக்சி மீது, தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில், வழக்கு தொடரப்பட்டது.அதில், பொறுப்பற்று செயல்பட்ட முகேஷ் சோக்சிக்கு, ஐந்தாண்டுகள் ஆடிட்டர் தொழில் புரிய தடை விதிக்கப்பட்டுள்ளது.


மேலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க, இந்திய சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட் அமைப்பிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம், ஒரு ஆடிட்டருக்கு தடை விதித்திருப்பது இதுவே முதன் முறை.

மூலக்கதை