சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையுமே அனுமதிக்க தயார்- தேவசம் போர்டு உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தயார் என்று தேவசம் போர்டு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் திடீரென ஒப்புதல் தரப்பட்டது. 

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் வழிப்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் 28 -ம் தேதி உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கூறியது.

தீர்ப்பை  மறு ஆய்வு செய்யக்கோரி தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம், தமிழகத்தில் வேல்டு இந்து மிஷன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சார்பாக 51 சீராய்வு மற்றும் ரிட் என 60 க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் ரோகிண்டன் பாலி நாரிமன், கன்வில்கர், சந்திராசூட் மற்றும் பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா ஆகியோரை உள்ளடக்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு, வழக்குகள் விசாரணைக்கு வந்தன. 

காரசார விவாதங்கள் நடந்தன. சீராய்வு மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பராசரன், சபரிமலை விவகாரம் அரசியல் சாசன பிரிவு 15க்கு எதிரானது என கூறுகின்றனர். ஆனால் இது மத ரீதியான விவகாரங்களுக்கு கண்டிப்பாக பொருந்தாது. மேலும் இதுபோன்ற பாரம்பரியம் மிக்க மத வழிபாட்டு விவகாரத்தில் நீதிமன்றங்களின் தலையீடு இருக்கக்கூடாது.தலைமை தந்திரி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கிரி: எந்த ஒரு தனித்துவம் மற்றும் பிரத்யேக நம்பிக்கை பல ஆண்டு காலமாக கடை பிடிக்கப்பட்டு வருகின்றதோ, அது எவ்வாறு அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக அமையும் என்பது புரியவில்லை என்றார்.

பந்தள குடும்பத்தின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சாய் தீபக்: நம்பிக்கை, சம்பிரதாயம், மதக் கோட்பாடு என காலம் காலமாக கடைப்பிடித்து வரப்படுகிறது. அதனால் இதைக் கண்டிப்பாக தீண்டாமை என கூறமுடியாது என்றார். 

இதையடுத்து சபரிமலை விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்ட அனைவரின் தரப்பிலும் அடுத்தடுத்து வாதங்கள் முன்வைக்கப்பட்டது.

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும்  வழிபாட்டுக்கு அனுமதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு  தேவசம் போர்டு தரப்பில் முதலில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. 

சீராய்வு மனு மீதான விசாரணையின்போது தேவசம் போர்டு தரப்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராகேஷ் திவேதி தனது வாதத்தில், “எந்த வழக்கமும்,  சம்பிரதாயமும் சம உரிமையை பறித்தால் அது அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக  கருதப்படும்’’ என்றார்.

அப்போது குறுக்கிட்ட பெண் நீதிபதி இந்து  மல்கோத்ரா, ‘‘இந்த வழக்கு விசாரணையின்போது நீங்கள் சபரிமலையில் பெண்களை  அனுமதிக்க கூடாது என்று தானே வாதிட்டீர்கள்?’’ என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த அவர், “இந்த விவகாரத்தில் தேவசம் போர்டு  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து ஆதரிப்பதற்காக இந்த முடிவை எடுத்து உள்ளது. எனவேதான் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என தற்போது  வாதிடுகிறோம்.

இதில் மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு பிரச்னைகளும் உள்ளடங்கி  உள்ளது. அதனால் இந்த விவகாரத்தில் ஏற்கனவே வழங்கிய நீதிமன்ற  தீர்ப்பை மறு ஆய்வு செய்யத் தேவையில்லை’’ என வாதிட்டார்.

கேரள அரசு தரப்பு வக்கீல், "இந்த வழக்கை பொறுத்தமட்டில் தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இதில் நீதிமன்றம் தீர ஆராய்ந்த பிறகு தான் ஒரு தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அரசியல் சானத்திற்கு எதிராக ஏதாவது மத நம்பிக்கை கடைபிடிக்கப்படுகிறது என்றால் அதில் நிச்சயம் நீதிமன்றம் தலையிடலாம்" என்றார்.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “சபரிமலை கோயில் விவகாரத்தில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது வெறும் தீண்டாமை என்பதை மட்டும் கருத்தில் கொண்டு கிடையாது. பலவற்றையும் அலசி ஆராய்ந்துதான் வழங்கப்பட்டு உள்ளது. 

மேலும் இந்த வழக்கில் தீண்டாமை இல்லை என வாதம் வைக்கிறீர்கள். இதில் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதபோது அவ்வாறு தானே அவர்கள் நினைத்துக் கொள்வார்கள்? என பல்வேறு கேள்வியெழுப்பிய நீதிபதிகள் இந்த வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்துவிட்டது. 

அனைத்து தரப்பினரும் இது தொடர்பாக ஒருவாரத்திற்குள் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டும்’ என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

மூலக்கதை