காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்த கேரள தொழில் அதிபர்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

கேரள தொழிலதிபர் ஒருவர் தனது ரூ.1 கோடி மதிப்புள்ள காருக்கான பதிவு எண்ணை ரூ.31 லட்சத்திற்கு ஏலம்  எடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சொகுசு வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களுக்கு அனைவரையும் கவரும் வகையில் பேன்சி பதிவெண்கள் வாங்குவது வழக்கம். இதனால்  பேன்சி எண்களுக்கு கடும் போட்டி நிலவுகிறது.

இதன் காரணமாக இந்த பேன்சி எண்கள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.  அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு குறிப்பிட்ட பதிவெண் ஒதுக்கப்படும்.

திருவனந்தபுரத்தில் ஒரு பேன்சி பதிவு எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போனது. பாலகோபால் என்ற தொழிலதிபர் ரூ.1 கோடி மதிப்புள்ள போர்ஷே என்ற  சொகுசு காரை வாங்கினார். அதற்கு கே.எல். 01 சி.கே.1 என்ற பதிவு எண்ணுக்காக திருவனந்தபுரம்  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். 

இதே  எண்ணுக்காக மேலும் 3 பேர் விண்ணப்பித்தனர். இதையடுத்து அந்த எண் ஏலத்தில் விடப்பட்டது. பாலகோபால் உட்பட 4 பேரும் அந்த பதிவு எண்ணுக்காக போட்டி  போட்டனர். ரூ.1 லட்சத்தில் தொடங்கிய ஏலம் பின்னர் 10, 20, 25 லட்சம் என அதிகரித்துக் கொண்டே போனது.

இறுதியில் அந்த பதிவெண்ணை பாலகோபால் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார். கேரளாவில் ஒரு வாகன எண் ரூ.31 லட்சத்திற்கு ஏலம் போவது இதுவே முதல்  முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை