பருவநிலை மாற்றம் பூமியின் நிலப்பகுதியில் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வில் தகவல்!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

பருவநிலை மாற்றம் பூமியின் நிலப்பகுதியில் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். 

கடல் மற்றும் நில அமைப்புளுக்கு இடையே உள்ள பருவநிலை முரண்பாடுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாக தெரிவித்து உள்ளனர். மனிதர்கள் ஏற்படுத்தும் மாசு தூசு, துகள்களாக காற்றில் கலந்து பனிப்புகை ஏற்படுத்துவதாகவும் இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகள் மட்டுமின்றி காடுகளும் பாதிப்படைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

பருவநிலை மாற்றத்தால் விவசாயம் உள்ளிட்ட முக்கிய காரணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் விவசாயம் பொய்த்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாகவும், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

பருவநிலை மாற்றத்தின் காரணமாக, சர்வதேச அளவில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதன் காரணமாக, இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலையும் அதிகரிக்கும் என்று அவர்கள் எச்சரித்து உள்ளனர். 

ஆசியா, ஆப்பிரிக்காவில் உள்ள 95 சதவீத நகரங்கள் மோசமான பருவநிலை சார்ந்த அபாயங்களை எதிர்நோக்கி உள்ளதாக ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

பருவநிலை மாற்றத்தால் அதிகரிக்கும் வெப்பநிலை, தீவிர வானிலை ஆகியவற்றால் உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் 100 நகரங்களில் 84 நகரங்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும் என்றும் அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 

தற்போது நிலவி வரும் காற்று மாசுக்களின் அளவை குறைக்கவில்லை என்றால் வரும் 2050-ம் ஆண்டில் கோடைக் காலத்திலேயே ஆர்டிக் கடல் பகுதியிலுள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் என்றும் ஆய்வறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. 

மூலக்கதை