விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இந்த மாதமே தொடங்க உள்ளது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை மத்திய அரசு இந்த மாதமே தொடங்க உள்ளதாக  தகவல்  வௌியாகி உள்ளது. இத்திட்டத்தில் பயன் பெறுவோர் பட்டியல் அரசிடம் ஏற்கனவே தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை கடந்த 1ம் தேதி தாக்கல் செய்த நிதியமைச்சர் பியூஷ் கோயல், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகள் அறிவித்தார். 

பிரதமரின் கிஷான் சம்மன் நிதி என்ற திட்டத்தின் கீழ் ஐந்து ஏக்கருக்கு குறைவாக விவசாய நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு  மத்திய அரசு ஆண்டுக்கு  ரூ.6000 நிதியுதவியை 3 தவணையாக  வழங்கும்  என்றார். 

இத்திட்டம் கடந்த  டிசம்பர் 1ம் தேதியில் இருந்து முன் தேதியிட்டு அமல்படுத்தப்படுகிறது.  இந்த   திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் அடைய உள்ளனர். 

தற்போதைய  நிதியாண்டில் இந்த திட்டத்துக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது.  முதல்கட்ட நிதியில் இருந்து  விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கணிசமான தொகை இம்மாதத்துக்குள் போடப்படும் என நிதியமைச்சக உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்து உள்ளார். 

இது குறித்து பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திரா கார்க் கூறியதாவது: 

பிரதமரின் கிஷான் சம்மன் நிதி திட்டத்தை கடந்த டிசம்பர் 1ம் தேதியில் இருந்தே அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ரூ.20 ஆயிரம் கோடி நிதியும்  பட்ஜெட்டில் ஒதுக்கீடு செயப்பட்டு உள்ளது. நாட்டில் உள்ள நிலம் பற்றி விவரங்கள் முழுவதுமாக உள்ளன. சிறு, குறு விவசாயிகளின் விவரமும் எங்களிடம்  உள்ளது. 

கடந்த 2015-16ல் எடுக்கப்பட்ட வேளாண் கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு வெளியிட்டது.  நில விவரங்களை எலக்ட்ரானிக் ஆவணங்களாக பல  மாநிலங்கள் வைத்து உள்ளன. யார் எவ்வளவு நிலம் வைத்துள்ளனர் என்ற விவரமும் உள்ளது.  இந்த நிலங்களை வைத்து உள்ளவர்களில் நிதியுதவி பெறுபவர்கள் யார் என்பதை மட்டும் வேளாண் துறை கண்டறிய வேண்டும்.

மாநில அரசுகளுடன் சேர்ந்து  அந்தப் பணியை வேளாண் துறை முடித்துவிடும். வேளாண் கணக்கெடுப்பு புள்ளி விவர உதவியுடன், 12 கோடி பயனாளிகளின் எண்கள் ஏற்கனவே வேளாண் துறையிடம் உள்ளது. துணை மானியக் கோரிக்கை பட்ஜெட்  கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட்டு, இத்திட்டத்துக்கு ரூ. 20 ஆயிரம் கோடி வழங்க ஒப்பதல் பெறப்படும். 

இத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஏற்கனவே ஒப்புதல் அளித்து உள்ளது. எனவே, இந்த மாதத்துக்குள் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் கணிசமான  உதவித்தொகை செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, அங்கிருந்தபடியே கூறியிருப்பதாவது: 
12 கோடி  சிறுகுறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அதோடு,  அவர்களுக்காக வீடு, மானிய விலையில் உணவு, இலவச மருத்துவ  வசதி, இலவச சுகாதார வசதி, மின்சாரம், சாலைகள், கேஸ் இணைப்புகள், குறைவான வட்டியில் கடன்கள் ஆகிய திட்டங்களும் கொண்டு வரப்பட்டு உள்ளன.  நிதியுதவி திட்டம் இந்த ஆண்டுதான் தொடங்கப்பட்டு உள்ளது.

அரசின் வருவாய் அதிகரிக்கும் போது, விவசாயிகளுக்கான இந்த உதவி தொகையையும்  அதிகரிக்க முடியும். மாநில அரசுகளும் இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு கூடுதலாக நிதியுதவி அளிக்கலாம். 

நிலமில்லா விவசாயிகள் 15 கோடி பேர்  மட்டுமே இத்திட்டத்தில் விடுபடுவர். அவர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயன் அடையலாம். 

இவ்வாறு அவர் கூறினார். 

மூலக்கதை