‘‘புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது’’ - ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
‘‘புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது’’  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

‘‘புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான முயற்சிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது’’ என நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்  தொடங்கியது. வரும் 13- ந் தேதி வரை நடக்க உள்ள இக்கூட்டத் தொடரில், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு,  முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்பதால், இதன் கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்.

இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேசியதாவது:

கடந்த 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், நாடு ஒரு நிச்சயமற்ற தன்மையை கடந்து கொண்டிருந்தது. தேர்தலுக்கு பின்னர் பதவியேற்ற மத்திய அரசு பதவியேற்ற முதல் நாளில் இருந்தே, ஊழலற்ற, நேர்மையான புதிய இந்தியாவை உருவாக்கும் நடவடிக்கைகளை தொடங்கி விட்டது. 

கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டு மக்களிடையே மத்திய அரசு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது. 

நாட்டின் பெருமையையும் மேம்படுத்தி, சமூகப் பொருளாதார மாற்றங்களை திறமையாகக் கொண்டு வந்திருக்கிறது. 

இதன் காரணமாக மக்களிடம் நம்பிக்கையையும் பெற்றுள்ளது. 130 கோடி இந்தியர்களின் வாழ்த்தகள் மற்றும் ஆதரவுடன் புதிய இந்தியாவை கட்டமைக்கும் மத்திய அரசின் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சுகாதார பணியில் இந்த அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. கடந்த ஆண்டு மத்திய அரசு உலகிலேயே மிகப்பெரிய சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை தொடங்கியது. இதன் மூலம், சுமார் ஐம்பது கோடி ஏழை மக்கள் ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் காப்பீடு வசதியுடன் கூடிய மருத்துவ சிகிச்சை பெற வழி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒன்பது கோடி கழிப்பிடங்கள் கட்டப்பட்டு உள்ளன. 

உஜ்வாலா திட்டத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 13.5 கோடி குடும்பங்கள் எரிவாயு இணைப்பு பெற்று உள்ளனர். தமிழகத்தில் மதுரை உட்பட பல இடங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான பணிகளில் விரைவு போன்ற முயற்சிகளும் எடுக்கப்பட்டு உள்ளன.

விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 22 பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உற்பத்தி விலைக்கு ஒன்றரை மடங்கு அதிகமாக உயர்த்தப்பட்டு உள்ளன.

பினாமிச் சொத்துக்கள் சட்டம், கருப்புப் பணத்தை மாற்றுவதைத் தடுக்கும் சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் கருப்புப் பணப் புழக்கம் குறைக்கப்பட்டு உள்ளது. 

இதனால், வீடுகளின் விலைகள் குறைந்து, சாதாரண நடுத்தர குடும்பமும் சொந்த வீடு பெற வழி ஏற்பட்டு உள்ளது.நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்தப்பட்டது, வர்த்தகத்தில் வெளிப்படைத் தன்மை ஏற்பட உதவி உள்ளது.  

இதன் காரணமாக எளிதாக வர்த்தகம் செய்வதில் 142- வது இடத்தில் இருந்து தற்போது 77வது இடத்திற்கு முன்னேறி இருப்பது, மிகச்சிறந்த சாதனை.

தமிழ்நாடு மற்றும் உத்தரப்பிரதேசத்தில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி மண்டலங்கள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இது நாட்டில் பாதுகாப்புத் திறனை மேம்படுத்தி இருப்பதோடு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டு வழியமைப்போம். 21-ம் நூற்றாண்டில் இந்தியாவை புகழேணியின் உச்சிக்குக் கொண்டு செல்வோம்.

இவ்வாறு ஜனாதிபதி பேசினார்.

மூலக்கதை