நிலவில் தரையிறங்கிய சீனாவின் சாங்கே-4 ஆய்வுக்கலம் அதிகுளிரையும் தாக்குப் பிடித்து செயல்பட தொடங்கி உள்ளது!

வலைத்தமிழ்  வலைத்தமிழ்

நிலவில் தரையிறங்கிய சீனாவின் சாங்கே-4 ஆய்வுக்கலம், அங்கு நிலவிய மைனஸ் 190 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலையையும் தாக்குப்பிடித்து மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளது. 

நிலவின் பின்புறத்தில் ஆய்வு  நடத்துவதற்காக சாங்கே-4 என்ற ஆய்வுக்கலத்தை, ‘லாங்க் மார்ச்-3பி’ எனற  ராக்கெட் மூலம் சீனா கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி அனுப்பியது. 

இந்த ஆய்வுக்கலம் நிலவின் பின்புறத்தில் கடந்த 3-ந் தேதி தரையிறங்கியது. இதில் 2,400 பவுண்ட்  எடையுள்ள லேண்டர், 300 பவுண்ட் எடையுள்ள ரோவர் (நகர்ந்து செல்லும் ஆய்வு  வாகனம்) என்ற இரண்டு முக்கிய பாகங்கள் உள்ளன.

லேண்டரில் இருந்து ரோவர் வெளிவந்து தனது முதல் படத்தை எடுத்து  அனுப்பியது. நிலவில் ஒரு பகல் பொழுது, பூமியில் 14 நாட்களுக்கு சமமானது. இதே போல்தான் இரவும். நிலவில் சாங்கே-4 தரையிறங்கியபோது பகல் பொழுதாக இருந்தது. இதனால் சில நாட்கள் சூரிய மின்சக்தி மூலம் அது இயங்கியது. 

அதன்பின் நிலவின் இரவு நேரத்தில் அதற்கு தேவையான சூரியசக்தி கிடைக்கவில்லை. அப்போது அங்கு குளிர் மைனஸ் 190 டிகிரி சென்டிகிரேட் நிலவியதாக ஆய்வுக்கலம் அனுப்பியுள்ள தகவல் மூலம் தெரிய வந்துள்ளது. 

நிலவில் இரவு நேரத்தில் மேற்பரப்பில் நிலவும் வெப்பநிலை குறித்த தகவலை சீன விஞ்ஞானிகள் முதல் முறையாக பெற்று உள்ளனர். இந்த கடும் குளிரை லேண்டரும், ரோவரும் தாக்குப்பிடிக்க அதில் ரேடியோ ஐசோடோப்பை சீன விஞ்ஞானிகள் பொருத்தியிருந்தனர். இதில் கிடைத்த வெப்பம் மூலம் நிலவில் இரவு நேரத்தில் நிலவிய மைனஸ் 190 டிகிரி குளிரில் ஆய்வுக்கலமும், ரோவரும் சேதம் அடையாமல் தப்பியுள்ளன. 

வெப்பத்தை மின்சாரமாக மாற்றும் ஐசோடோப் தெர்மோ எலக்ட்ரிக் தொழில்நுட்பம்  ஆய்வுக் கலத்தில் முதன்முறையாக பொருத்தப் பட்டுள்ளது. 

நிலவில் நீண்ட இரவுக்குப்பின் சூரிய ஒளி பட்டது. இதையடுத்து லேண்டரும், ரோவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து விழித்து மீண்டும் செயல்படத் தொடங்கி உள்ளதாக சீன விண்வெளி மையம் தெரிவித்து உள்ளது.   

மூலக்கதை