ஜிஎஸ்டி வழக்குகளுக்கு தீர்வு காண மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

தினகரன்  தினகரன்
ஜிஎஸ்டி வழக்குகளுக்கு தீர்வு காண மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

புதுடெல்லி : ஜிஎஸ்டி தொடர்பான வழக்குகளுக்கு தீர்வு காண தேசிய அமர்வாக மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக மாநில அளவில் செயல்பட்டு வரும் தீர்ப்பாயங்களில் வழங்கப்படும் தீர்ப்பு குறித்து திருப்தியில்லை என்றால் அதுகுறித்து மேல்முறையீடு செய்வதற்காக மத்திய மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைப்படுகிறது. டெல்லியில் அமைக்கப்படும் இந்த தீர்ப்பாயத்தில் ஜிஎஸ்டி கவுன்சில் தலைவர், மாநிலம் மற்றும் மத்திய அரசின் சார்பில் தலா ஒரு உறுப்பினர்கள் இடம் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 96 லட்சத்து 50 ஆயிரம் செலவில் அமைக்கப்படும் தீர்பாயத்திற்கு, ஆண்டுதோறும் ஆறு கோடியே 86 லட்சம் செலவிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி விதிப்பில் எழும் பிரச்னைகளுக்கு முறையான தீர்வை தருவதாக இந்தத் தீர்ப்பாயம் அமையும் என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு புதிய அமைப்பு விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஜிஎஸ்டி தொடர்பான பிரச்னைகளுக்கு ஒரே அளவுகோல் அடிப்படையில் தீர்வு காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை