சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கை

தினகரன்  தினகரன்
சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கை

கேரளா: சபரிமலையில் 17 இளம்பெண்கள் மட்டுமே தரிசனம் செய்ததாக புதிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை செயல்படுத்த கேரள மாநில அரசு முயற்சி மேற்கொண்டது. இதை எதிர்த்து ஐயப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தினர். பக்தர்களின் போராட்டத்தை கட்டுப்படுத்தி போலீசார் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக கேரள அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் 51 இளம்பெண்கள் சபரிமலையில் தரிசனம் செய்ததாக அறிவித்தனர். சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழா காலங்களில் 51 இளம்பெண்களும் தரிசனம் செய்ததாகவும் தெரிவித்த கேரள அரசு அவர்களின் பெயர் விவரம் மற்றும் ஆதார் அட்டை விவரங்களையும் பட்டியலில் குறிப்பிட்டிருந்தது.இந்த பட்டியல் வெளியானதும் அதில், பல்வேறு முரண்பாடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் சில ஆண்களின் பெயர்கள் பட்டியலில் இருந்தது தெரிய வந்தது. பட்டியலில் ஏற்பட்ட குளறுபடி கேரள அரசுக்கு பெரும் பிரச்சினையை ஏற்படுத்தியது. இதையடுத்து பட்டியலில் உள்ள குளறுபடியை கண்டறிந்து புதிய பட்டியல் தயாரிக்க கேரள அரசு உத்தரவிட்டது. இதற்காக தலைமை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி. ஆகியோர் அடங்கிய புதுக்குழுவும் அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் ஏற்கனவே வெளியான 51 பேர் பட்டியலை ஆய்வு செய்தனர். அதில், 34 பேரை விடுவித்தனர். மீதம் 17 பேரே சபரிமலை சென்று ஐயப்பனை தரிசித்ததாக தெரிவித்தனர். இந்த புதிய பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படுகிறது.

மூலக்கதை