பிப்ரவரி முதல் வீடு தேடி வருகிறது கலர்புல் வாக்காளர் அடையாள அட்டை : தேர்தல் அதிகாரிகள் தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிப்ரவரி முதல் வீடு தேடி வருகிறது கலர்புல் வாக்காளர் அடையாள அட்டை : தேர்தல் அதிகாரிகள் தகவல்

வேலூர் : வரும் பிப்ரவரி மாதம் முதல் வண்ண வாக்காளர் அடையாள அட்டை வீடுதேடி வரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த செப்டம்பர் 1ம் தேதி வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி செப்டம்பர் 1ம்தேதி முதல் அக்டோபர் 31ம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் பணிகளை செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.

18 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பத்தை பெற்று பெயரை சேர்த்தனர். பெறப்பட்ட விண்ணப்பங்களை வீடுகள்தோறும் சென்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி முதல் வாரத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஆனால் இந்தாண்டு முதல் முறையாக நாடு முழுவதும் வாக்காளர் பதிவு அலுவலர்களுக்கான இணையதளம் உருவாக்கப்பட்டு, ஒவ்வொரு வாக்காளரின் தகவல்களும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது.

இதன் மூலம் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் இயல்பாகவே கண்டறிய, ஒரு பதிவு நீக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் வாக்காளர்கள் இரண்டு அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை பதிவு செய்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனால் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு காலதாமதமாகி உள்ளது.

இந்த நிலையில், வரும் 31ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் அந்தந்த மாவட்டங்களில் வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 5ம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பின்னர் ஜனவரி 25ம் தேதி தேசிய வாக்காளர் தினத்தையொட்டி புதிதாக பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ள வாக்காளர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.

ஆனால் இந்த ஆண்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட காலதாமதம் ஏற்பட்டுள்ளது. வரும் 31ம் தேதி பட்டியல் வெளியிடப்பட உள்ளதால் வாக்காளர் அடையாள அட்டையும், பிப்ரவரி மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வண்ண வாக்காளர் அடையாள அட்டையை வீடுகள் தோறும் வழங்குவார்கள்.

இவ்வாறு கூறினர்.

.

மூலக்கதை