பெங்களூரு ரிசார்ட்டில் நடந்த மதுபான விருந்தில் மோதல்: மண்டையை உடைத்த காங். எம்எல்ஏ கைது?

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூரு ரிசார்ட்டில் நடந்த மதுபான விருந்தில் மோதல்: மண்டையை உடைத்த காங். எம்எல்ஏ கைது?

பெங்களூரு: பெங்களூரு ரிசார்ட்டில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்எல்ஏக்களில் இருவர் மோதிக் கொண்டதில், மண்டையை உடைத்த எம்எல்ஏ இன்று கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமை அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட எம்எல்ஏ போலீஸ் அதிகாரி முன் இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மாநிலத்தின் குதிரை பேர அரசியல், அடிதடியில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

கர்நாடக மாநில முதல்வர் குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மஜத கூட்டணி ஆட்சிக்கு, கடந்த வாரம் திடீர் நெருக்கடி ஏற்பட்டதால், மாநில காங்கிரஸ் மேலிடம் தங்களது கட்சி எம்எல்ஏக்களை பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்க வைத்தது. மாநில அமைச்சர் டி. கே. சிவகுமார் தலைமையில், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தப்பிச் செல்லாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.



இந்நிலையில், பெங்களூரு அடுத்த பிடதி விடுதியில் தங்கியிருந்த 74 காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு காங்கிரஸ் எம்பி - டி. சுரேஷ் கடந்த 20ம் தேதி விருந்து அளித்தார். விடியவிடிய நடந்த இந்த விருந்து நிகழ்ச்சியில் மதுபானமும் பரிமாறப்பட்டு, சகல வசதிகளும் செய்து தரப்பட்டதாக தெரிகிறது. அப்போது, நீண்டகால‌ நண்பர்களான காம்ளி தொகுதி எம்எல்ஏ கணேஷுக்கும், விஜயநகர் தொகுதி எம்எல்ஏ அனந்த்சிங்குக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில், அங்கிருந்த பீர் பாட்டிலால் அனந்த் சிங்கை, கணேஷ் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அனந்த் சிங்கின் மண்டை உடைந்தது.

இதையடுத்து, அவர் பெங்களூருவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றன‌ர்.

ஆனால், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அடிதடி செய்து மண்டை உடைத்துக் கொண்ட மோதல் சம்பவத்தை மாநில நீர்வள அமைச்சர் டி. கே. சிவகுமார் தொடர்ந்து மறுத்து வந்தார்.

இதுகுறித்து அவர் கூறுைகயில், ‘‘நெஞ்சு வலி காரணமாகவே எம்எல்ஏ அனந்த் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்’’ என்று விளக்கமளித்தார். ஆனால், மருத்துவமனையில் வீங்கிய முகத்துடன் அனந்த் சிங் படுத்திருக்கும் புகைப்படம், சமூக வலைதளங்களில் வெளியானது.

அதனால், காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்குள் இடையே விடுதியில் மோதல் நடந்தது உண்மைதான் என்பது உறுதிசெய்யப்பட்டது. இதனிடையே, மோதல் தொடர்பாக அனந்த் சிங் தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதில், ‘தேர்தலின் போது நிதி உதவி செய்யவில்லை என்ற கோபத்தில் எம்எல்ஏ கணேஷ், நான் ரிசார்ட்டில் தங்கியிருந்தபோது வழிமறித்து வாக்குவாதம் செய்தார். அங்கிருந்து நான் செல்ல முற்பட்டபோது என்னை வழிமறித்து தாக்கினார்.



என் உறவினர்களை கொன்று விடுவதாக மிரட்டினார். எனது கை, கால், தலை, கண் என அனைத்து பகுதிகளிலும் சரமாரியாக தாக்கினார்.

இதில் பலத்த காயமடைந்த நான் தொடர் சிகிச்சை பெற்று வருகிறேன்’ எனக் கூறியிருந்தார். இந்த புகாரை ஏற்ற போலீசார், எம்எல்ஏ கணேஷ் மீது கொலை முயற்சி உள்பட 323, 324, 307, 504, 506 போன்ற பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

ெபங்களூரு அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனந்த் சிங், சம்பவம் குறித்து மூத்த நிர்வாகிகளிடம் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய காங்கிரஸ் கட்சி, எம்எல்ஏ கணேஷை சஸ்பெண்ட் செய்துள்ளது.

துணை முதல்வர் பரமேஸ்வரா தலைமையிலான கமிட்டி நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீசார் பிணையில் வரமுடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளதால், கணேஷ் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.

இதனிடையே, இன்று (ஜன. 23) போலீஸ் அதிகாரி முன் ஆஜராக குற்றம்சாட்டப்பட்ட கணேஷூக்கு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதன்படி, இன்று போலீசார் முன் கணேஷ் ஆஜராகும்பட்சத்தில், அவர் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.   கடந்த வாரம் முழுவதும் பாஜ எம்எல்ஏக்கள் அரியானா டெல்லியில் முகாம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 4 பேர் மும்பையில் முகாம், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் 4 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட் என்று பரபரப்பாக காணப்பட்ட கர்நாடக மாநில குதிரை பேர அரசியல் களம், தற்போது எம்எல்ஏவின் மண்டை உடைப்பு, மோதல், அடிதடி, வழக்குப்பதிவு என்ற நிலையில் நீண்டு கொண்டே செல்கிறது.


.

மூலக்கதை