காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூங்காக்களே இல்லாத செங்கை நகராட்சி: மக்கள் வேதனை

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பூங்காக்களே இல்லாத செங்கை நகராட்சி: மக்கள் வேதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் சுமார் ஒரு லட்சத்,துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வரும் நிலையில், இங்கு நகராட்சி சார்பில் ஒரு பூங்கா, உடற்பயிற்சி கூடம்கூட நிறுவப்படவில்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.   காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட வேதாசலம் நகர், அழகேசன் நகர், நத்தம் உள்ளிட்ட 33 வார்டுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் வசிக்கின்றனர். சுமார் 125 ஆண்டுகள் பழமையான செங்கல்பட்டு நகராட்சியில் மக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை ஒரு பூங்காகூட நிர்மாணிக்கப்படாத அவலநிலை தொடர்ந்து வருகிறது.

செங்கல்பட்டு நகராட்சிக்கு பிறகு வளர்ச்சி கண்ட மதுராந்தகம், மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோயில், காட்டாங்கொளத்தூர், ஊரப்பாக்கம் போன்ற பகுதிகளில்கூட மக்களுக்கு தேவையான ஒருசில வசதிகள் உள்ளன. ஆனால், மிகப் பழமையான செங்கல்பட்டு நகராட்சி மக்களுக்கு மட்டும் உடல்நலம் சார்ந்த வசதிகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

  குறிப்பாக, இப்பகுதி மக்கள் உடல்நலம் காக்க நடை பயிற்சி மற்றும் குழந்தைகள் பொழுதுபோக்க ஒரு பூங்காகூட அமைக்கப்படவில்லை.

மேலும், இப்பகுதி இளைஞர்கள் ஆரோக்கிய உடல்நலனை பேணுவதற்கான உடற்பயிற்சி கூடமும் நிர்மாணிக்கப்படவில்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன் அழகேசன் நகரில் ஒரு சிறுவர் பூங்கா நகராட்சி நிர்வாக ஆணையரால் திறந்து வைக்கப்பட்டது.

அதன்பின் அப்பூங்கா போதிய பராமரிப்பின்றி சிறிது நாட்களிலேயே மூடுவிழா கண்டது. செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாநகர், ஜேசிகே நகர், சாஸ்திரி நகர் பகுதிகளில் பூங்காவுக்கு இடம் இருந்தும், அங்கு பூங்கா அமைக்கப்படாமல், தற்போது அவை சமூகவிரோதிகளின் புகலிடங்களாக மாறிவிட்டன.

  நூற்றாண்டை கண்ட இந்நகராட்சியில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடங்களை அமைப்பதற்கு நகராட்சி அதிகாரிகள், ஆளுங்கட்சியினரும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஏனெனில், இங்கு நீண்ட காலமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களே எம்எல்ஏவாகவும், நகரமன்றத் தலைவர், உறுப்பினர்களாகவும் இருந்து வருகின்றனர்.
  இக்காரணத்துக்காக இந்நகராட்சி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தருவதற்கு அரசு நிர்வாகம் மறுத்து வருகிறது.

கட்சி பாகுபாடு இன்றி இந்நகராட்சி மக்களின் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்ய மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

.

மூலக்கதை