நேதாஜியின் 122-வது பிறந்தநாள் விழா: டெல்லியில் அவரது நினைவாக அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

தினகரன்  தினகரன்
நேதாஜியின் 122வது பிறந்தநாள் விழா: டெல்லியில் அவரது நினைவாக அருங்காட்சியகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

டெல்லி: இந்திய தேசிய ராணுவம் என்ற படைப்பிரிவை ஏற்படுத்தி நாட்டின் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தை தொடங்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் 122-வது பிறந்தநாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் பிறந்தநாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அருங்காட்சியகத்தை திறந்துவைத்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் குழந்தை பருவம் தொடங்கி, சுதந்திரப் போராட்டத்தில் அவரது வீரதீர  செயல்பாடுகள் குறித்து விளக்கும் வகையில் அருங்காட்சியகம் டெல்லி செங்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்துவைத்து பார்வையிட்டார். \'ஆசாத் கி தீவானே\' என பெயரிடப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சுதந்திரப் போராட்டக் காலத்தை விளக்கும் ஓவியங்கள், நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் புகைப்படங்கள் என ஏராளமான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. நேதாஜியுடன் பணியாற்றிய சுதந்திரப் போராட்ட தியாகிகளையும் பிரதமர் மோடி சந்தித்தார். மேலும் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிஸ்டர் நகரில் ஜாலியன் என்ற இடத்தில் ஜெனரல் டயர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் ஆங்கிலேய ராணுவம் அங்கு கூடியிருந்த பொதுமக்களை சுட்டதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்திய வரலாற்றில் கருப்புதினமாக பதிவான இந்நாளை நினைவுகூரும் வகையில், டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஜாலியன்வாலாபாக் நினைவு அருங்காட்சியகத்தையும் பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த அருங்காட்சியகத்திற்கு யாத்-இ-ஜாலியன் என்று பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை