இலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா!

PARIS TAMIL  PARIS TAMIL
இலகுவாக நியுசிலாந்தை வீழ்த்திய இந்தியா!

நியுசிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இந்திய அணி 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி ஒன்றினை பதிவு செய்துள்ளது.
 
இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாட களம் இறங்கிய நியுசிலாந்து அணி இந்திய அணியின் அபார பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 157 ஓட்டங்களுக்குள் சுருண்டது.
 
பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் முகமது ஷமி 3 விக்கட்டுக்களையும், குல்தீப் யாதவ் 4 விக்கட்டுக்களையும், சஹால் 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். துடுப்பாட்டத்தில் நியுசிலாந்து அணி சார்பில் அணித்தலைவர் வில்லியம்சன் அதிகபட்சமாக 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார்.
 
இதனைத் தொடர்ந்து 158 என்ற இலகுவான வெற்றியிலக்கினை நோக்கி இந்திய அணி களம் இறங்கியது. இதன்போது 10 ஓவர் வீசப்பட்டிருந்த நிலையில் சூரிய ஒளியால் போட்டி அரைமணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால் இந்திய அணிக்கு 49 ஓவரில் 156 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
 
ரோகித் சர்மா 11 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார். அடுத்து தவான் உடன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் அரைசதம் அடிக்க, இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கை 132 ஆக இருக்கும்போது விராட் கோலி 45 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஆட்டமிழந்தார்.
 
3-வது விக்கெட்டுக்கு தவான் உடன் அம்பதி ராயுடு ஜோடி சேர்ந்தார். இந்தியா 34.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்று 8 விக்கட்டுக்களினால் அபார வெற்றி பெற்றிருந்தது.
 
6 ஓவர்கள் வீசி 19 ஓட்டங்களை மாத்திரமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய முகமது ஷமி ஆட்டநாயகனாக தெரிவானார்.
 
இதன்போது இந்திய அணி சார்பில் இரண்டு புதிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டிருந்தன. நியூசிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி ஆட்டமிழக்கச் செய்தார். இதன்போது நியூசிலாந்து வீரர் மார்டின் குப்திலின் விக்கட், முகமது சமிக்கு 100-வது விக்கட்டாக அமைந்திருந்தது.
 
இதன் மூலம், குறைந்த போட்டியில் 100 விக்கட்டுகள் வீழ்த்திய இந்தியர் என்ற பெருமையை முகமது சமி பெற்றுள்ளார். தனது 56-வது ஒருநாள் போட்டியில் முகமது சமி 100-வது விக்கட்டை வீழ்த்தியுள்ளார்.
 
முன்னதாக, 59 ஒருநாள் போட்டிகளில் இர்பான் பதான், 100 விக்கட்டுகள் வீழ்த்தியிருந்ததே சாதனையாக இருந்தது. ஜாகீர் கான் 65 போட்டிகளில் 100 விக்கட்டை எட்டியிருந்தார்.
 
அதேபோன்று  தவான் இந்த போட்டியில் 10 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஐயாயிரம் ஓட்டங்களை கடந்திருந்தார். 19 ஒருநாள் போட்டியில் 118 இன்னிங்சில் தவான் ஐயாயிரம் ஓட்டங்களை கடந்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் போட்டியில் அதிவேகத்தில் ஐயாயிரம் ஒட்டங்கள் எடுத்த 4-வது வீரர் என்ற சாதனையை மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் லாராவுடன் இணைந்து பெற்றார்.
 
ஹசிம் அம்லா101 இன்னிங்சிலும், விவியன் ரிச்சர்ட்ஸ் மற்றும் விராட்கோலி ஆகியோர் 114 இன்னிங்சிலும் ஐயாயிரம் ஓட்டங்களை இதற்கு முன்னர் கடந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மூலக்கதை