'ஹாட்ரிக்' ஹீரோ கோஹ்லி: ஐ.சி.சி., விருது பட்டியலில் இந்தியா ஆதிக்கம்

தினமலர்  தினமலர்
ஹாட்ரிக் ஹீரோ கோஹ்லி: ஐ.சி.சி., விருது பட்டியலில் இந்தியா ஆதிக்கம்

துபாய்: ஐ.சி.சி., விருது பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் தட்டிச் சென்ற முதல் வீரர் என்ற சாதனை படைத்தார் இந்திய அணி கேப்டன் கோஹ்லி.

பல விருதுகள்



சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த விளையாட்டு நட்சத்திரங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. 2018ம் ஆண்டின் விருது பட்டியல் வெளியானது. இதில் இந்திய அணி கேப்டன் கோஹ்லிக்கு பல விருதுகள் கிடைத்தன.

கடந்த ஆண்டு பங்கேற்ற 13 டெஸ்டில் 5 சதம் உட்பட 1,322 ரன்கள் (சராசரி 55.08), 14 ஒருநாள் போட்டிகளில் 6 சதம் உட்பட 1,202 ரன்கள் (சராசரி 133.55) எடுத்தார். பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆண்டு இறுதியில் டெஸ்ட், ஒருநாள் அரங்கில் 'நம்பர்-1' ஆக உள்ளார்.
இவரது தலைமையிலான இந்திய அணி டெஸ்டில் 'நம்பர்-1', ஒருநாள் அரங்கில் 'நம்பர்-2' ஆக உள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான 'கேரி சோபர்ஸ்' கோப்பையை கோஹ்லி தட்டிச் சென்றார். மொத்தம் 36 பேர் கொண்ட குழு, சிறந்த வீரராக கோஹ்லியை ஒரு மனதாக தேர்வு செய்தனர்.



தவிர ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் சிறந்த ஒருநாள் வீரர் என ஒரே ஆண்டில் மூன்று விருதுகளையும் தட்டிச் சென்றார் கோஹ்லி. ஐ.சி.சி., சார்பிலான கனவு ஒருநாள், டெஸ்ட் அணிகளுக்கும் கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டார்.ஒருநாள் அணியில் ரோகித் சர்மா, குல்தீப் யாதவ், பும்ராவும், டெஸ்ட் அணியில் ரிஷாப் பன்ட், பும்ரா இடம் பிடித்தனர். சிறந்த வளர்ந்து வரும் வீரருக்கான விருது இந்தியாவின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பன்ட் தட்டிச் சென்றார்.
கனவு அணிகள் விவரம்


டெஸ்ட்


கோஹ்லி (கேப்டன்), டாம் லதாம் (நியூசி.,), கருணாரத்னே (இலங்கை), வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸ் (நியூசி.), ரிஷாப் பன்ட் (விக்கெட் கீப்பர், இந்தியா), ஜேசன் ஹோல்டர் (விண்டீஸ்), ரபாடா (தெ.ஆப்.,), லியான் (ஆஸி.,), பும்ரா (இந்தியா), முகமது அபாஸ் (பாக்.,).

ஒருநாள் அணி


கோஹ்லி (கேப்டன்), ரோகித் சர்மா (இந்தியா), பேர்ஸ்டோவ், ஜோ ரூட் (இங்கிலாந்து), ராஸ் டெய்லர் (நியூசி.,), ஜாஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் (விக்கெட் கீப்பர், இங்கிலாந்து), முஸ்தபிஜூர் ரஹ்மான் (வங்கதேசம்), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), குல்தீப் யாதவ், பும்ரா (இந்தியா).

மூலக்கதை