இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு

தினமலர்  தினமலர்
இந்திய ஆடைகளுக்கு பிரத்யேக அளவு குறியீடு

காந்திநகர் : இந்திய ஆடைகளுக்கு பிரத்யேகமான ஆடை அளவுகள் உருவாக்கப்படும் என, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பங்கேற்று பேசினார். அப்போது, ‘‘அமெரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகள், தங்களுக்கென பிரத்யேக ஆடை அளவுகளை வைத்திருப்பது போல, இந்தியாவுக்கும் தனியான அளவு குறியீடுகள் உருவாக்கப்படும்’’ என, தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஆடைகள் ஏற்றுமதி பிரிவைப் பொறுத்தவரை, மிகப் பெரிய சவாலாக, ஆடைகள் அளவு என்பது இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள், அவற்றுக்கு என, தனியான அளவுகளை வைத்துள்ளன. அதேபோல், அமெரிக்காவும் தனியான அளவு குறியீடுகளை வைத்துள்ளது. ஆனால் இந்தியாவுக்கு, இது போல பிரத்யேகமான ஆடை அளவு குறியீடுகள் இல்லை. 42, 44, எக்ஸ் எல் என, பலவிதங்களில் ஆடை அளவுகளை குறிப்பிடுகின்றனர்.

எனவே, இந்தியாவுக்கு என பிரத்யேகமான, ‘சைஸ் இந்தியா’ திட்டம் உருவாக்கப்பட்டு, விரைவில் அது நாடு முழுக்க அமல்படுத்தப்படும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய ஜவுளித் துறையின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக, கடந்த ஆண்டில் மட்டும், 1,800 கோடி ரூபாயை ஒதுக்கி உள்ளது.

இந்த ஒதுக்கீட்டை தொடர்ந்து, 30 ஆயிரம் கோடி ரூபாய் புதிய முதலீடுகள் ஜவுளி துறைக்கு வந்துள்ளன.ஜவுளித் துறையில் உள்நாட்டு தேவை குறித்து புள்ளிவிபரங்கள் எடுத்து, ஆராய்ச்சி செய்யப்படும். அதன் மூலம், இந்திய ஜவுளி துறையின் அடிப்படை வலுவாக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை