ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., நிறுவனம் வசம் வந்தது

தினமலர்  தினமலர்
ஐ.டி.பி.ஐ., வங்கியை கையகப்படுத்தியது, எல்.ஐ.சி.,; 51 சதவீத பங்குகள், எல்.ஐ.சி., நிறுவனம் வசம் வந்தது

புதுடில்லி : ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம் கையகப்படுத்தும் பணிகள் முழுமையாக நிறைவேறிவிட்டதாக, ஐ.டி.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது. இதையடுத்து, ஐ.டி.பி.ஐ., வங்கியின் பெரும்பான்மை பங்குதாரராக, எல்.ஐ.சி., உருவெடுத்து உள்ளது.

‘ஐ.டி.பி.ஐ., வங்கியின் பங்குகளை, எல்.ஐ.சி., வாங்குவது குறித்து, கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இம்முடிவு இரு தரப்புக்கும் நன்மை தரும். பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என, அனைத்து தரப்பினருக்கும் பலனளிக்க கூடியதாக அமையும்’ என, மும்பை பங்குச் சந்தைக்கு அளிக்கப்பட்ட அறிக்கையில், ஐ.டி.பி.ஐ., குறிப்பிட்டுள்ளது.கடந்த ஆகஸ்ட் மாதம், மத்திய அமைச்சரவை குழு, ஐ.டி.பி.ஐ., வங்கியை, எல்.ஐ.சி., கையகப்படுத்துவதற்கு அனுமதி வழங்கியது.

இந்த கையகப்படுத்துதல் மூலம், எல்.ஐ.சி., நிறுவனம், வங்கித் துறையில் அடியெடுத்து வைக்கிறது.இந்த நடவடிக்கை, சிரம நிலையில் இருக்கும், ஐ.டி.பி.ஐ., வங்கிக்கும் நன்மை பயப்பதாக இருக்கும் என, கருதப்படுகிறது.நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ஐ.டி.பி.ஐ., வங்கி, 3,602 கோடி ரூபாய் நிகர நஷ்டத்தை சந்தித்துள்ளது.மேலும், அதன் வாராக் கடனும்,31.78 சதவீதமாக அதிகரித்துள்ளது.ஐ.டி.பி.ஐ., வங்கிக்கு, 1.5 கோடி வாடிக்கையாளர்களும், 18 ஆயிரம் ஊழியர்களும் உள்ளனர்.

இந்த கையகப்படுத்துதல் மூலமாக, ஐ.டி.பி.ஐ., வங்கியின், 800 கிளைகளும், எல்.ஐ.சி., நிறுவனத்தின் காப்பீட்டு பாலிசி வணிகத்துக்கு உதவியாக இருக்கும் என, கருதப்படுகிறது.

உயரதிகாரிகள் மாற்றம் இல்லை:
ஐ.டி.பி.ஐ., வங்கியின், 51 சதவீத பங்குகளை, எல்.ஐ.சி., நிறுவனம் கையகப்படுத்தி உள்ள நிலையில், ஐ.டி.பி.ஐ. வங்கி, அதன் உயரதிகாரிகள் பொறுப்பில் எந்த மாற்றமும் இருக்காது என, அறிவித்து உள்ளது.குறிப்பாக, வங்கியின் நிர்வாக இயக்குனராக இருக்கும் ராகேஷ் ஷர்மா, உதவி நிர்வாக இயக்குனர்களான கே.பி.நாயர், ஜி.எம். யத்வாத்கர் ஆகியோர் அதே பதவியில் தொடருவர் என, தெரிவித்துள்ளது.

அதேசமயம், ராஜேஷ் கந்த்வால் கூடுதல் இயக்குனராகவும், ஐ.டி.பி.ஐ., வங்கியின் நிர்வாக குழுவில், எல்.ஐ.சி., சார்பான இயக்குனராகவும் நியமிக்கப்படுவதற்கும் வங்கி நிர்வாக குழு, அனுமதி வழங்கி உள்ளது.கந்த்வால், எல்.ஐ.சி.எச்.எப்.எல்., கேர் கோம்ஸ் நிறுவனத்தின் இயக்குனராகவும், தலைமை செயல் அதிகாரியாகவும் உள்ளார்.

மூலக்கதை