வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு?

தினமலர்  தினமலர்
வெளிநாட்டு நிறுவனங்களால் உள்நாட்டு வர்த்தகம் பாதிப்பு?

சென்னை : ‘‘இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், உள்நாட்டு வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுவதால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்,’’ என, மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்ககத்தின் கூடுதல் இயக்குனர், எம்.தாகூர் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்ககம், அயல்நாட்டு வர்த்தக இயக்ககம் ஆகியவை இணைந்து, ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகர்களுடன், கலந்துரையாடல் நிகழ்ச்சியை, சென்னையில், நேற்று நடத்தின.

இதில், மத்திய வர்த்தக தொழில் தீர்வு இயக்குனரக, கூடுதல் இயக்குனர், எம்.தாகூர் பேசியதாவது: வர்த்தகத்திற்காக இந்தியாவுக்குள் வரும் வெளிநாட்டு நிறுவனங்கள், இந்திய வர்த்தகத்தை பாதிக்கும் வகையில் செயல்படுகின்றன. இதனால், இங்குள்ள தொழில் நிறுவனங்கள், விழிப்புடன் செயல்பட வேண்டும். தங்கள் நிறுவனங்களைப் பாதுகாக்கும் வழிவகைகளை கண்டறிவது அவசியம்.

இதற்காக, வர்த்தக தீர்வுகளுக்கான இயக்ககத்தை, மத்திய அரசு உருவாக்கி உள்ளது. உலக பொருளாதார சூழலுக்கு ஏற்ப, பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான நிவாரணம், தாமதமின்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மூன்று ஆண்டுகளில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 16 சதவீதமாக உள்ள உற்பத்தித் துறையின் பங்கை, மூன்று ஆண்டுகளில், 25 சதவீதமாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், அயல்நாட்டு வர்த்தக இயக்குனரக, கூடுதல் இயக்குனர், டி.கே.சேகர் மற்றும் ஏராளமான வர்த்தகர்கள் பங்கேற்றனர்.

மூலக்கதை