தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் இருப்பதாக ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
தொழில் புரட்சியில் இந்தியா முன்னணி; பிற நாடுகளைவிட அதிக துணிச்சலுடன் இருப்பதாக ஆய்வறிக்கை

டாவோஸ் : நான்காம் தொழிற்புரட்சியின் சவால்களை சந்திப்பதில், மற்ற நாடுகளை விட, இந்திய நிறுவனங்கள், சிறப்பான நிலையில் இருக்கின்றன என தெரிவித்துள்ளது, ‘டெலாய்ட்’ எனும் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை.

உலக பொருளாதார மன்றத்தின் ஆண்டு மாநாடு, இம்முறை சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், 3,000 உலகத் தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். இந்தியாவில் இருந்து, 100 தொழில்துறைத் தலைவர்கள் பங்கேற்றுஉள்ளனர். 19 நாடுகளைச் சேர்ந்த, 2,000 தலைமை அதிகாரிகளிடம் நடைபெற்ற ஆய்வு இது. இந்தியாவில் இருந்து, 130 பேர் அதில் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:இணையமும் இயந்திரமும் சேர்ந்து உருவாக்கும், ‘தொழிற்புரட்சி 4.0’ எனும், நான்காம் தொழிற்புரட்சி நடைபெற்றுவரும் இக்காலகட்டத்தில், உலகத் தொழிற்துறைத் தலைவர்கள் அனைவரும், தமது நாட்டின் தொழிலகங்களையும், பணியாளர்களையும் தயார்படுத்துவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஆனால், இந்திய தொழிலகங்களோ, எதிர்காலத் தேவைகளை மனதில் கொண்டு, பணியாளர்களை முன்கூட்டியே தயார்படுத்தி வருகின்றன. தேவைகளில் இருந்து லாபத்தை ஈட்ட முடியும் என்பதை, இந்திய நிர்வாகத்துறையைச் சேர்ந்தவர்கள், நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர்.

தொழில்நுட்பங்களை நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் என்ற அறவுணர்வும், இவர்களிடம் அதிகமாக உள்ளது.சமூக ரீதியான தாக்கமே தமது வெற்றிக்கான அளவுகோல் என்று, உலக தொழில் தலைவர்களில், 34 சதவீதம் பேர் கருத்து தெரிவிக்க, வாடிக்கையாளர் திருப்தியே முதன்மையான நோக்கம் என்று, 29 சதவீத இந்திய தொழில் தலைவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவில், தமது நிறுவனம் சமூகத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும் பொருளையோ, சேவையையோ உற்பத்தி செய்திருக்கிறது என்று, 85 சதவீத பேர் நம்புகின்றனர்.இதே போன்ற கருத்தைத் தெரிவிப்போரின் உலக சராசரி, 73 சதவீதம் தான்.தங்கள் நிறுவனத்தில் முடிவுகள் எடுப்பதற்குத் தெளிவான வழிமுறை இருப்பதாக, இந்தியத் தொழிலகத் தலைவர்களில், 58 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இதுதான் மிகவும் அதிகம்.

தவறு செய்யவும் அதன்மூலம் பாடம் கற்கவும் வாய்ப்பு அளிக்கும் தலைமைகள், இந்தியாவில் இருப்பதாக, 65 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். உலக அளவில் இது, 69 சதவீதம்.உலக அளவில், 33 சதவீத நிறுவனங்களே சந்தையைத் தகர்க்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய முன்வரும் நிலையில், இந்திய நிறுவனங்களோ, 41 சதவீதம் முதலீடு செய்யத் தயாராக இருக்கின்றன. இவ்வாறு, டெலாய்ட் ஆய்வறிக்கை தெரிவித்து உள்ளது.

துணிச்சல்:
நான்காம் தொழிற்புரட்சிக்குத் தேவைப்படும் பணியாளர்களை உருவாக்குவதில், உலகத் தொழிலகத் தலைவர்கள் சந்திக்கும் அதே சவால்களைத் தான், இந்தியத் தலைவர்களும் சந்திக்கின்றனர். ஆனால், அதை சமாளிப்பதில் இந்திய தலைவர்கள் துணிச்சலுடன் இருக்கின்றனர்.
-டெலாய்ட் நிறுவனத்தின் ஆய்வறிக்கை

மூலக்கதை