தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டில் பங்கேற்போருக்கு காப்பீடு கோரி வழக்கு

தமிழர் வீர விளையாட்டான ஜல்லிகட்டில் பங்கேற்போர், பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு  காப்பீடு  செய்யக் கோரிய வழக்கில் அரசு விளக்கமளிக்குமாறு உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டு உள்ளது. 

மதுரை, அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:

தமிழகத்தில் விழா மற்றும் பண்டிகை காலங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு மஞ்சு விரட்டு போன்ற பல்வேறு வீரவிளையாட்டுகள் நடத்தப்படுவது வழக்கம்.

இந்நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கில் பங்கேற்கின்றனர். ஏராளமானோர் காயம் அடைகின்றனர். எதிர்பாராத விதமாக உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.  ஆனால், ஜல்லிக்கட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளில் பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள், சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு காப்பீடு செய்யப்பட்டு நிதியுதவி செய்யும் திட்டம் எதுவும் இல்லை.

எனவே, ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டின் போது பாதிக்கப்படுவோர், காயமடைவோர், பலியானோரின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிட காப்பீடு செய்யும் திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அரசுத் தரப்பில், உரிய விளக்கமளிக்க உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22 -ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மூலக்கதை