சம்பள உயர்வு கோரி தமிழகம் முழுவதும் 23ம் தேதி கோயில் பணியாளர்கள் ஸ்டிரைக்: அர்ச்சனை, அபிஷேகம் நடக்காது

தமிழ் முரசு  தமிழ் முரசு
சம்பள உயர்வு கோரி தமிழகம் முழுவதும் 23ம் தேதி கோயில் பணியாளர்கள் ஸ்டிரைக்: அர்ச்சனை, அபிஷேகம் நடக்காது

தஞ்சை: 7வது ஊதியக்குழு பரிந்துரையின்படி சம்பளம் வழங்க வேண்டும், பணிக்ெகாடை வழங்க வேண்டும். பென்ஷன் உயர்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு திருக்கோயில் பணியாளர்கள் சங்கம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி ஆணையருடன் பேச்சுவார்த்தை நடந்தது.

இதில் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனால் கோயில் பணியாளர்கள் வரும் 23ம் தேதி ஸ்டிரைக்கில் ஈடுபடுகிறார்கள்.

நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். அதன்பின்னரும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.



இது குறித்து தமிழ்நாடு முதுநிலை திருக்கோயில் பணியாளர் சங்க மாநில துணைச் செயலாளர் சங்கர் கூறியதாவது: 23ம் தேதி தமிழகம் முழுவதும் திருக்கோயில் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகிறோம். இந்த போராட்டத்தின் போது அனைத்து திருக்கோயில் பணியாளர்களும் பணிக்கு வந்து வருகைபதிவேட்டில் கையொப்பம் மட்டும் இடுவார்கள்.

அதே போல் அலுவலகப் பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து வருகை பதிவேட்டில் கையொப்பம் இடுவார்கள். உள்துறை பணியாளர்கள் தங்களது பொறுப்பான இடங்களில் உள்ள கதவுகளை திறந்து மட்டும் வைத்திருப்பார்கள்.

டிக்கட் கவுனடரில் பணி பார்ப்பவர்கள் எந்தவிதமான டிக்கட்டையும் விற்பனை செய்ய மாட்டார்கள்(அர்ச்சனை, அபிஷேகம், உபயசேவைகள்,

அன்னதானம்). பரிகாரகர்கள் நைவேத்தியத்திற்கு உரிய பொருட்களை பெற்றுக் கொண்டு கால பூஜைக்கான நைவேத்தியத்தினை மட்டும் தயார் செய்து அர்ச்சகர் வசம் ஒப்படைத்து விடுவார்கள்.   டிரைவர்கள் தங்கள் வசம் உள்ள வண்டியை ஓட்டமாட்டார்கள்.

பொறுப்பு அதிகாரியிடம் வண்டி சாவியை கொடுத்துவிடுவார்கள். அர்ச்சகர்கள் 4 கால பூஜையை தவிர வேறு எந்தவிதமான அர்ச்சனை, அபிஷேகம் செய்யமாட்டார்கள்.

டெண்டர், உண்டியல் திறப்பு போன்ற பணிகளில் ஈடுபடமாட்டார்கள்.   எனவே வரும் 23ம் தேதி திருக்கோயில் பணிகள் முழுமையாக பாதிப்படையும்.

இவ்வாறு அவர் கூறினார்.

.

மூலக்கதை