ஜெயலலிதா மரணத்ைத விசாரிக்கும் விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்: சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெயலலிதா மரணத்ைத விசாரிக்கும் விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜர்: சுமார் 4 மணி நேரம் நடந்த விசாரணையால் பரபரப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் முதல் முறையாக இன்று காலையில் ஆஜராகி பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆணையத்தின் சார்பில் இதுவரை அப்போலோ டாக்டர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், போயஸ் கார்டன் ஊழியர்கள், சசிகலா மற்றும் ஜெயலலிதா உறவினர்கள் உட்பட 150க்கும் மேற்பட்டவர்களிடம் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது. இந்த விசாரணையில், ஜெயலலிதாவை வெளிநாட்டுக்கு மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்ல விடாமல் தடுத்தது யார்?.

அவருக்கு ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை கடைசி வரை செய்யாதது ஏன்?. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு இனிப்பு வகை உணவு வழங்க சொன்னது யார்? என்ற பல்வேறு கேள்விகளுக்கு தற்போது வரை விடை கிடைக்கவில்லை.



இந்நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த காலகட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையிலேயே இருந்தனர். அவர்களிடம் ஜெயலலிதாவுக்கு தினமும் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்தும், அவருக்கு அளிக்கப்பட உள்ள சிகிச்சைகள் குறித்தும் அப்போலோ டாக்டர்கள் குழுவினர் ஆலோசித்ததாக டாக்டர்கள் சிலர் வாக்குமூலம் அளித்தனர்.

எனவே ஜெயலலிதாவை மேல் சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்லலாமா? வேண்டாமா? ஆஞ்சியோ சிகிச்சை செய்யலாமா? வேண்டாமா? என்பது குறித்து ஆலோசனை நடத்தியிருக்கலாம் என்று ஆணையம் கருதியது. அதன் அடிப்படையில் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆணையம் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

ஆனால் மூன்று முறை பல்வேறு காரணங்களுக்காக ஆஜராகவில்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் ஜனவரி 21ம் தேதி அன்று விஜயபாஸ்கரை ஆஜராகுமாறு நீதிபதி அவருக்கு சம்மன் அனுப்பினார்.

அதன் பேரில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காலை 10 மணி அளவில் நீதிபதி ஆறுமுகச்சாமி முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் ஆணைய வழக்கிறஞர் முகமது ஜபாருல்லா கான் விசாரணை நடத்தினார்.

அப்போது ஜெயலலிதாவை எத்தனை முறை பார்த்தீர்கள்? அவரை மேல்சிகிச்சைக்காக வெளிநாட்டுக்கு அழைத்து செல்வது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? இந்த ஆலோசனையில் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டார்களா? ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து தினமும் உங்களிடம் விவாதிக்கப்பட்டதா? ஜெயலலிதாவுக்கு ஆஞ்சியோகிராம் அறுவை சிகிச்சை கடைசி வரை செய்யாதது ஏன்?.
டிசம்பர் 4ம்தேதி திடீரென அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் வர காரணம் என்ன?.

ஜெயலலிதா உடல் நிலையில் கடைசி வரை முன்னேற்றம் ஏற்படாதததற்கு என்ன காரணம்? ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறதா? என்பது உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கேள்விகளை ஆணைய வழக்கறிஞர் சரமாரியாக எழுப்பினார்.

அதற்கு விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கத்தை நீதிபதி வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டார்.

தொடர்ந்து அமைசச்சர் விஜயபாஸ்கர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் அவரிடம் குறுக்கு விசாரணை செய்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் இருந்து, சில கேள்விகளை சந்தேகமாக எழுப்பி சசிகலா தரப்பு குறுக்கு விசாரணை செய்தது.

அதற்கும் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். இந்த விசாரணை சுமார் 4 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

அமைச்சர் விஜயபாஸ்கரிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையால் பரபரப்பு ஏற்பட்டது.

.

மூலக்கதை