குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம் சிபிஐ விசாரணையில் புதிய ஆதாரம் சிக்கியது: போலீஸ் உயர் அதிகாரிகள் கலக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
குட்கா விற்பனைக்கு ரூ40 கோடி லஞ்சம் சிபிஐ விசாரணையில் புதிய ஆதாரம் சிக்கியது: போலீஸ் உயர் அதிகாரிகள் கலக்கம்

சென்னை: குட்கா முறைகேட்டில் உயர் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிய ஆதாரத்தை வருமான வரித்துறை, தலைமைச் செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு அனுப்பியதற்கான புதிய ஆதாரங்கள் தற்போது சிக்கியுள்ளன. இதனால் விரைவில் உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில் குட்கா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தடையை மீறி குட்கா விற்பனை வருகிறது.

குட்கா விற்பனையை தங்கு தடையின்றி செய்வதற்காக அரசியல்வாதிகள், போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு சென்னையைச் சேர்ந்த குட்கா தயாரிப்பாளர்கள் ரூ. 40 கோடிக்கு மேல், லஞ்சம் கொடுத்ததை வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். குட்கா தயாரிப்பாளர்களின் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் சிக்கிய டைரி மூலம் இந்த தகவல் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து டெல்லி வருமான வரித்துறை அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கும்,

போலீஸ் டி. ஜி. பி. க்கும் ரகசிய கடிதம் அனுப்பினார்கள். தலைமை செயலாளருக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் “குட்கா விற்பனைக்காக அமைச்சருக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவும்” என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறி இருந்தனர். அதுபோல 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி போலீஸ் டி. ஜி. பி. க்கு எழுதப்பட்ட கடிதத்தில், “குட்கா விற்க லஞ்சம் வாங்கிய இரு போலீஸ் உயர் அதிகாரிகள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மீண்டும் ஆகஸ்டு 13-ந்தேதி வருமான வரித்துறை சார்பில் டி. ஜி. பி. க்கு மேலும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், “தமிழகத்தில் நாங்கள் சோதனை நடத்த குறிப்பிட்ட இடத்துக்கு போலீஸ் பாதுகாப்பு கேட்டதும், உடனடியாக அந்த தகவலை போலீசார் அந்தந்த தொழில் அதிபர்களிடம் சொல்லி விடுகிறார்கள்” என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இத்தகைய கடிதங்கள் எதுவும் வரவில்லை என்று கோர்ட்டில் தமிழக அரசு கூறியது.

இதையடுத்து வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்களை கண்டுபிடிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் குட்கா ஊழல் வழக்கு கடந்த ஆண்டு சி. பி. ஐ. க்கு மாற்றப்பட்டது.

இதற்கிடையே வருமான வரித்துறையினர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தியபோது அங்கு சசிகலா அறையில் வருமான வரித்துறை எழுதியிருந்த ரகசிய ஆவணம் ஒன்று சிக்கியது. இதனால் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய ஆவணங்கள் விவகாரத்தில் மர்மம் நிலவியது.

குட்கா ஊழல் விவகாரத்தில் சி. பி. ஐ. அதிகாரிகள் அடுத்தடுத்து விசாரணை நடத்தி 7 பேரை கைது செய்தனர்.

அடுத்தக்கட்டமாக போலீஸ் உயர் அதிகாரிகளை விசாரிக்க சி. பி. ஐ. முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் வருமான வரித்துறை அனுப்பிய ரகசிய கடிதத்தை தமிழக தலைமை செயலாளரும், டி. ஜி. பி.

அலுவலகமும் பெற்றதற்கான புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. குட்கா விற்பனையாளர்களிடம் இருந்து அமைச்சர் லஞ்சம் பெற்றதற்கான ஆவணம் அனுப்பிய வருமான வரித்துறையின் கடிதத்தை தலைமை செயலகத்தில் உள்ள உதவி நிர்வாக அதிகாரி ஒருவர் பெற்றுள்ளார்.

அதுபோல டி. ஜி. பி. அலுவலகத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தை டி. ஜி. பி.

அலுவலக முகாம் சூப்பிரண்டு ஒருவர் பெற்றுள்ளார். இதன் மூலம் டெல்லி வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து தமிழக தலைமை செயலாளருக்கும், டி. ஜி. பி. க்கும் கடிதங்கள் வந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து வருமான வரித்துறை அனுப்பிய கடிதங்கள், ஆவணங்கள் திட்டமிட்டு மறைக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் வலுத்துள்ளது.

குட்கா ஊழல் வழக்கில் இந்த புதிய ஆதாரம் அமைச்சர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடியை மேலும் இறுக செய்துள்ளது.

.

மூலக்கதை