சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சாலை விபத்தில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின் கவலைக்கிடம்: உதவுமாறு குடும்பத்தினர் உருக்கம்

வதோதரா:  இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜேகப் மார்ட்டின், சாலை விபத்தில் சிக்கி கவலைக்கிடமான நிலையில் உள்ளார்.   வதோதரா மருத்துவமனையில் உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் அவரை காப்பாற்ற தேவையான உதவிகளை செய்யுமாறு பிசிசிஐ மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் அவரது குடும்பத்தினர் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஜேகப் மார்ட்டின்.

குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த இவர் சவுரவ் கங்குலியின் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியில் கடந்த 1999ம் ஆண்டு இடம் பெற்று, 2001ம் ஆண்டு வரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். மேலும் கடந்த 2001ம் ஆண்டு, ரஞ்சிக் கோப்பைக்கான பரோடா அணியின் கேப்டனாக இவர் ஆடியுள்ளார்.

அந்த ஆண்டு பரோடா அணி, ரஞ்சிக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இறுதிப் போட்டியில் ரயில்வே அணியிடம் தோல்வியடைந்து, பட்டம் பெறும் வாய்ப்பை இழந்தது.

138 முதல் தரப் போட்டிகளில் ஆடியுள்ள ஜேகப் மார்ட்டின் அவற்றில் 9,192 ரன்களை (சராசரி 47 ரன்கள்) குவித்துள்ளார்.
கடந்த டிச. 28ம் தேதி வடோதரா அருகே சாலை விபத்தில் சிக்கி ஜேகப் மார்ட்டின் படுகாயமடைந்தார்.

வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர், கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என்றும் வென்டிலேட்டர் கருவியின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

விபத்தில் கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட அவரது உள்ளுறுப்புகள் பலத்த சேதமடைந்துள்ளதாகவும், இதுவரை அவரது சிகிச்சைக்கான செலவு ரூ. 11 லட்சத்தை தாண்டி விட்டதாகவும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர். மேலும் அவரது சிகிச்சைக்கு தேவையான பணம் தங்களிடம் இல்லை என்றும், இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் முன்னாள் வீரர்கள் அவரது சிகிச்சைக்கு உதவ வேண்டும் என்றும் அவர்கள் உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதையடுத்து ஜேகப் மார்ட்டினின் சிகிச்சைக்கு பிசிசிஐ ரூ. 5 லட்சம் வழங்கியுள்ளது.   பரோடா கிரிக்கெட் அசோசியேஷனும் ரூ. 3 லட்சம் வழங்க முன்வந்துள்ளது. இது குறித்து பிசிசிஐ மற்றும் பரோடா கிரிக்கெட் அசோசியேஷனின் முன்னாள் செயலர் சஞ்சய் படேல் கூறுகையில், ‘‘ஜேகப் மார்ட்டின் விபத்தில் காயமடைந்த செய்தி எனக்கு சற்று தாமதமாகத்தான் தெரியவந்தது.

உடனடியாக மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தேன்.

நான் மருத்துவமனைக்கு சென்ற போது, பணமில்லாததால் அவருக்கான சிகிச்சையை மருத்துவமனை நிர்வாகம் பாதியில் நிறுத்தி வைத்திருந்தது.

உடனடியாக பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசினேன். அவர்கள் மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் பேசி, நேரடியாக பணத்தை டெபாசிட் செய்தனர்.

அதன் பின்னர் அவருக்கு தடையில்லாமல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரது சிகிச்சைக்கு மேலும் பணம் தேவைப்படுகிறது.

அதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் பேசி வருகிறேன். முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சிலர் உதவி செய்துள்ளனர்.

மேலும் சிலர் உதவ முன்வந்துள்ளனர்.

உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை