ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாம் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ஒசாகா

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் காலிறுதிப் போட்டிக்கு ஜப்பான் வீராங்கனை நவோமி  ஒசாகா தகுதி பெற்றுள்ளார். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் 4ம் இடத்தில் உள்ள நவோமி ஒசாகாவும், 13ம் இடத்தில் உள்ள லாட்வியாவை சேர்ந்த செவஸ்டோவாவும் இன்று காலை நடந்த 4ம் சுற்றுப் போட்டியில் மோதிக் கொண்டனர்.

வியப்பூட்டும் விதமாக முதல் செட்டை செவஸ்டோவா கைப்பற்றி, ஒசாகாவுக்கு அதிர்ச்சியளித்தார். இருப்பினும் இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் ஒசாகாவின் கையே ஓங்கியிருந்தது.

இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் ஒசாகா அதிரடியாக கைப்பற்றினார். 3வது செட்டில் தற்காப்பு முறையை கையாண்ட ஒசாகா, அதில் செவஸ்டோவாவின் ஒரு கேமை வசப்படுத்தினார்.

தொடர்ந்து தனது கேம்களை தக்க வைத்துக் கொண்டார். அதன் பின்னர் ஒசாகாவின் சர்வீஸ்களை, செவஸ்டோவாவால் எதிர்கொள்ள முடியவில்லை.

இதையடுத்து அலட்டிக் கொள்ளாமல் 3வது செட்டையும் கைப்பற்றிய ஒசாக, இப்போட்டியில் 4-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

வெளியேறினார் பெடரர் முன்னதாக நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் 4ம் சுற்று போட்டியில் ஆஸி. ஓபன் நடப்பு சாம்பியன் ரோஜர் பெடரர், கிரீஸ் வீரர் ஸ்டெபனாஸ் ட்சிப்டிசாஸிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

3 மணி நேரம் 45 நிமிடங்கள் நடந்த அப்போட்டியில் 7-6 என முதல் செட்டை மட்டும் பெடரர்  கைப்பற்றினார். அதிரடியாக ட்சிப்டிசாஸ் 7-6, 7-5, 7-6 என்ற கணக்கில் அடுத்தடுத்து கைப்பற்றி, காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

இந்த தோல்வி குறித்து பெடரர் கூறுகையில், ‘‘வருத்தமாக உணர்கிறேன். ஆனால் மிகச் சிறப்பாக ஆடிய ஒரு வீரரிடம் நான் தோல்வியடைந்திருக்கிறேன் என்பதால் மகிழ்ச்சியடைகிறேன்.

ட்சிப்டிசாஸ் இதற்கு முந்தைய  சர்வதேச போட்டிகளில் ஜோகோவிச் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் சிலரை வென்றுள்ளார்.

அவருக்கு டென்னிசில் நல்ல எதிர்காலம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

.

மூலக்கதை