விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
விதிகளை மீறி சொகுசு வாழ்க்கை சசிகலா வேறு சிறைக்கு மாற்றம்?: வினய்குமார் அறிக்கையால் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார் என்று விசாரணை அதிகாரி வினய்குமார் பரபரப்பு அறிக்கையை அரசுக்கு அளித்துள்ளார். இதனால் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு உண்மை என்று தெரிந்ததால், அவரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து கர்நாடகா அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.

தமிழக முதல்வராக ஜெயலலிதா கடந்த 1991 முதல் 1996 வரை இருந்த சமயத்தில் வருமானத்திற்கும் அதிகம் சொத்து சேர்த்துள்ளதாக தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இ்யக்குனரகம் வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கு பெங்களூரு தனி நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி கடந்த 2014ல் வழங்கிய தீர்ப்பில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரை குற்றவாளியாக உறுதி செய்ததுடன் நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.



அந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறை செய்தபோது குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அதை எதிர்த்து கர்நாடக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

அதை விசாரணை நடத்திய நீதிமன்றம் கடந்த 2017 பிப்ரவரி 14ம் தேதி வழங்கிய தீர்ப்பில் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் பெங்களூரு தனி நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரி என்று உறுதி செய்தது. அதை தொடர்ந்து  சசகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அகரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையில் சிறைத்துறை அதிகாரியாக இருந்த டிஐஜி ரூபா, பரப்பன அக்ரஹார சிறையில் சோதனை நடத்தியபோது, சிறை விதிமுறைகளை மீறி சசிகலாவுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியுள்ளதாகவும், இதற்காக ரூ. 2 கோடி வரை பண பரிமாற்றம் நடந்துள்ளதாக பரபரப்பாக குற்றம்சாட்டினார்.

மேலும் சிறை துறை டிஜிபியாக இருந்த சத்யநாராயண, சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணாகுமார், அனிதா உள்பட சிலர் சலுகை வழங்க ஒத்துழைப்பு வழங்கியதாக கடந்த 2017 ஜூலை மாதம் குற்றம்சாட்டியதுடன் மாநில உள்துறைக்கும் கடிதம் எழுதினார்.

போலீ்ஸ் அதிகாரி ரூபாவின் புகார் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில் குழுவை மாநில அரசு அமைத்தது.

அக்குழு விசாரணை நடத்திய அதன் அறிக்கையை 2017 அக்டோபர் மாதம் அரசிடம் வழங்கியது. அதில் சிறையில் சில முறைகேடு நடந்துள்ளது உண்மை தான், ஆனால் சசிகலாவுக்கு சலுகை வழங்க ரூ. 2 கோடி கை மாறியதாக கூறியுள்ளதற்கு உரிய ஆதாரமில்லை என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டதே தவிர வினய்குமார் கமிட்டி கொடுத்த அறிக்கையை முழுமையாக வெளியிடவில்லை.

இதனிடையில் சிறையில் சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியது தொடர்பாக வினய்குமார் குழு கொடுத்துள்ள அறிக்கையை வழங்ககோரி தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் டி. நரசிம்மமூர்த்தி கடந்த 2018ம் ஆண்டு சிறை துறையிடம் விண்ணப்பித்தார்.

அவரின் கோரிக்கைக்கு ஓராண்டாக பதில் கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டது. அவர் தொடர்ந்து கொடுத்த அழுத்தம் காரணமாக 19. 1. 2019 (நேற்று முன்தினம்) மாநில அரசின் கூடுதல் செயலாளரும் சிறைத்துறை பொது தகவல் அறியும் உரிமை குழு அதிகாரியுமான எம். ஆர். ஷோபா வழங்கியுள்ள அறிக்கையில் சிறையில் சசிகலாவுக்கு வழங்கியுள்ள சலுகைகள் தொடர்பாக வினய்குமார் கொடுத்துள்ள அம்சங்கள் இடம் பெற்றுள்ளது.

அறிக்கையில் உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கியதை தொடர்ந்து 2017 பிப்ரவரி 15ம் தேதி சசிகலா உள்பட 3 பேர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, அவருக்கு ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு வழங்குவதற்காக நான்கு சிறையில் இருந்து கைதிகள் வேறு செல்களுக்கு மாற்றியுள்ளனர்.



சசிகலா தங்கியுள்ள அறையில் புதியதாக திரைசீலை போடப்பட்டுள்ளது. சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்து கொடுப்பதற்காக அஜந்தா என்ற பெண் கைதியை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

அறையில் கூடுதலாக நாற்காலிகள் போடப்பட்டுள்ளது. சசிகலா கேட்கும்போதேல்லாம் உதவி செய்வதற்கு ஆட்கள் ஈடுப்படுத்தியுள்ளனர்.

மேலும் சிறையில் உள்ள தண்டனை கைதிகளை உறவினர்கள், நண்பர்கள் சந்திப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளது. சசிகலா விஷயத்தில் எந்த விதிமுறைகள் பின்பற்றவில்லை.

கைதிகளை குறிப்பிட்ட சில மணி நேரம் மட்டுமே ஒதுக்கப்படும். ஆனால் சசிகலாவை சந்தித்து பேச சில சமயங்களில் 4 மணி நேரத்திற்கு மேல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு தனி இடம் உள்ளது. ஆனால் சசிகலாவை சந்தித்தவர்கள் அவர் தங்கியுள்ள அறையில் சென்று சந்தித்து பேசியுள்ளனர், பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அறைக்கு ஆண்கள் செல்லக்கூடாது என்ற விதிமுறை மீறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றம் வழிகாட்டுதல் படி நாடு முழுவதும் உள்ள சிறைகளின் செயல்பாடுகளை கண்காணிக்க சிசி கேமரா பொருத்த வேண்டும், செல்போன் உரையாடல்களை பதிவு செய்ய ஜாமர் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவு பரப்பன அக்ரஹாரா சிறையில் பின்பற்றவில்லை. சிசி கேமராக்கள் இயங்கவில்லை.

சிறை வளாகத்தில் உள்ள 19 ஜாமர்களும் செயல்படவில்லை என்பது உள்பட பல தகவல்களை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். சசிகலாவுக்கு சலுகைகள் வழங்கியுள்ளதற்கான விவரங்களை வினய்குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் சசிகலா சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், அவர் வேறு சிறைக்கு மாற்றப்படுவார் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

.

மூலக்கதை