பொது மின் மீட்டர் பிரச்னையில் தகராறு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை: அண்ணன் மகன் கைது

தமிழ் முரசு  தமிழ் முரசு
பொது மின் மீட்டர் பிரச்னையில் தகராறு ஆட்டோ டிரைவர் அடித்துக்கொலை: அண்ணன் மகன் கைது

ஆவடி: வீட்டுக்கு பொதுவாக வைக்கப்பட்டுள்ள மின்மீட்டர் பிரச்னையில் ஆட்டோ டிரைவரை அடித்துக்கொலை செய்த அண்ணன் மகன் கைது செய்யப்பட்டார். ஆவடியை அடுத்த நந்தவனமேட்டூர், கலைஞர் முதல் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (44).

இவர் ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ஜெயலட்சுமி.

இவர்களுக்கு குழந்தை இல்லை. ஆறுமுகத்தின் அண்ணன் தேவேந்திரன் மகன் தேவராஜ் (25).

இவர் கட்டிட தொழிலாளி. இவர்களது வீடு அருகருகே உள்ளது.
இவர்களது வீட்டுக்கு பொதுவாக ஒரு மீன் மீட்டர் உள்ளது.

இந்த 2 வீடுகளுக்கான மின் உபயோக தொகையை ஆட்டோ டிரைவர் ஆறுமுகத்தான் கட்டி வந்துள்ளார். இந்த நிலையில், அந்த பொது மின் மீட்டரை தனது வீட்டின் சுவரில் ஆறுமுகம் பொருத்தியுள்ளார்.   இதன்காரணமாக நேற்று மாலை ஆறுமுகத்துக்கும் தேவராஜுக்கும் இடையே கடும் வாய்த் தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த தேவராஜ், வீட்டில் இருந்த உருட்டுக் கட்டையை எடுத்துவந்து ஆறுமுகத்தை சரமாரியாகத் தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வந்து சண்டையை விலக்கி விட்டுள்ளனர்.

இதன்பிறகு ஆறுமுகம் தனது வீட்டுக்கு வந்து படுத்துள்ளார்.

அப்போது கொஞ்ச நேரத்தில் கடும் நெஞ்சுவலியால் ஆறுமுகம் துடித்துள்ளார். உடனடியாக அவரை ஆவடி அரசுமருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே ஆறுமுகம் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். இதன்பின்னர் ஆறுமுகத்தின் சடலத்தை வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

அப்போது ஆறுமுகத்தின் நெஞ்சு பகுதியில் இருந்து ரத்தம் பீறிட்டு வந்ததால் மனைவியும் உறவினர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் மனைவி ஜெயலட்சுமி கொடுத்த புகாரில், ‘’எனது கணவர் ஆறுமுகத்தை உருட்டுக் கட்டையால் தேவராஜ் அடித்து கொலை செய்துள்ளார்.

அவர்மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று விசாரித்தனர். பின்னர் ஆறுமுகத்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இதனிடையே தேவராஜை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

.

மூலக்கதை