நெருங்கும் கோடைகாலம் சென்னையில் ஒருவருக்கு 60 லிட்டர் தண்ணீர் குறைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
நெருங்கும் கோடைகாலம் சென்னையில் ஒருவருக்கு 60 லிட்டர் தண்ணீர் குறைப்பு

சென்னை: கோடை காலம் நெருங்குவதாலும், சென்னைக்கு தண்ணீர் வழங்க கூடிய முக்கிய ஏரிகள் வறண்டு வருவதாலும் ஒருவருக்கு வழங்கப்பட்டு வந்த 140 லிட்டர் தண்ணீரில் 60 லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும் மக்களுக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த வருடம் பருவமழை சரியாக இல்லாத காரணத்தால் சென்னைக்கு தண்ணீர் வழங்ககூடிய ஏரிகள் தண்ணீரில் இல்லாமல் காணப்படுகிறது. சென்னை மக்களின் குடிநீருக்காக ரெட் ஹில்சில் தேக்கி வைக்கப்படும் நீரும் விளிம்பு நிலைக்கு வந்துள்ளது.

பொதுவாக சென்னை மக்களுக்கு ஒரு நாளைக்கு 830 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொடுக்கப்பட்டு வந்தது. இதன் மூலம் ஒருவருக்கு ஒரு நாளைக்கு 140 லிட்டர் தண்ணீர் கிடைத்தது.

ஆனால் தற்போது நீர் பற்றாக்குறை ஏற்பட்டு வருவதால் 830 மில்லியன் லிட்டர் சப்ளை 650 மில்லியன் லிட்டராக குறைந்தது. இந்தநிலையில் தற்போது அது 450 மில்லியன் லிட்டர் அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் 140 லிட்டரில் 60 லிட்டர் குறைக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தற்போது சென்னைக்கு, நெம்மிலி மீஞ்சூரிலிருந்து 100 மில்லியன் லிட்டர், வீராணம் ஏரியிலிருந்து 180 மில்லியன் லிட்டர், விவசாய கிணறுகளில் இருந்து 100 மில்லியன் லிட்டர், சிக்கராயபுரத்திலிருந்து 30 மில்லியன் லிட்டர் தண்ணீரும் எடுக்கப்பட உள்ளது. மேலும் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கவும், கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை தடுக்கவும் குடிநீர் வாரியம், கோயம்பேட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை வரும் ஜூன் மாதத்திற்குள் தொடங்க உள்ளது.

மேலும் கழிவு சுத்திகரிப்பு குறித்து தனியார் நிறுவனங்கள், குடியிருப்பு வாசிகள், கல்வி நிறுவனங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பெருங்குடி, நெசப்பாக்கத்திலும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் தொடங்க டெண்டர் விடப்படவுள்ளது.

இதில் வரும் நீரில் 40 சதவீதம் தனியார் நிறுவனங்களுக்கு சாதாரண குடிநீர் வழங்கப்படும் விலையிலேயே வழங்கப்படும்.

எனவே கழிநீர் சுத்திகரிப்புக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை