தொடர் முதலீட்டுக்கு என்ன தேவை?

தினமலர்  தினமலர்
தொடர் முதலீட்டுக்கு என்ன தேவை?

உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவது என்பது, மிகப்பெரும் கவர்ச்சிகரமான விஷயமாக மாறிவிட்டது. ஒவ்வொரு மாநிலமும் இந்த முயற்சியில் இறங்கியுள்ளன. இதன் சிறப்பு, பலன்கள் பற்றி இங்கு பார்ப்போம்.சமீபத்தில், ‘வைப்ரன்ட் குஜராத்’ என்ற பெயரில், ஒன்பதாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த வாரம், தமிழகத்திலும் இந்த மாநாடு நடைபெற இருக்கிறது.கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம், பல உலக நாடுகள் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றன; தனியார் நிறுவனங்கள் பங்கு கொள்கின்றன. எண்ணற்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. கோடிக்கணக்கான முதலீடுகள், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளுக்கான உறுதிமொழிகள் என, நாளிதழ் செய்திகள், நம்மை பிரமிக்க வைக்கின்றன.தேசிய அளவில், சர்வதேச முதலீடுகளை வரவேற்க ஏதுவான கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன. விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன; நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. தொழில், வர்த்தகத் துறை இதற்கான முன்னெடுப்புகளை செய்து வருகிறது.வரும், 2020ம் ஆண்டிற்குள், 1 லட்சம் கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பது தொழில், வர்த்தகத் துறை நிர்ணயித்துள்ள இலக்கு. இதற்கு ஏற்ப, ஜப்பான், தென் கொரியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் தொழில் துவங்குவதற்கு என்றே, தொழிற்பேட்டைகளை அமைத்து தர, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையில், பல துறைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தேசிய அளவில் ஏற்பட்டுள்ள இந்த முன்னேற்றம் முதன்மையானது. இதையொட்டியே, பல மாநிலங்கள் தங்கள் முதலீட்டு ஈர்ப்பு முயற்சியை நடத்துகின்றன.உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிள்ளையார் சுழி போட்டவர், 2000ம் ஆண்டு, கர்நாடக முதல்வராக இருந்த, எஸ்.எம்.கிருஷ்ணா. பெங்களூரில் நடைபெற்ற முதல் மாநாட்டில், 20 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கான உத்தரவாதம் பெறப்பட்டது. ஐ.டி., தொழிலை முன்னிறுத்தி, எஸ்.எம்.கிருஷ்ணா, பெரும் கவர்ச்சியை உருவாக்கினார் என்றால், அவரை அப்படியே பின் தொடர்ந்து, ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை முன்னிறுத்தி, பெரும் முதலீட்டை ஈர்த்தவர், சந்திரபாபு நாயுடு.இவ்விருவரையும் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலமும் இந்தத் திசையில் பயணம் செய்யத் துவங்கின. இதில் ஒரு முக்கிய விஷயம் உண்டு. பொதுவாக, வெளிமாநில முதலீட்டாளர்களையும், நிறுவனங்களையும் அழைத்து முதலீடு செய்யச் சொல்லலாம். ஆனால், வெளிநாடுகளை அழைப்பது அவ்வளவு சுலபமல்ல.அது, இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வர்த்தக ஒப்பந்தங்களாகவே இருந்து வந்தன. முதல், பெங்களூர் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பின், இந்த நிலைமை மாறத் துவங்கியது. பல மாநிலங்கள் நேரடியாக வெளிநாடுகளையும், அங்குள்ள தொழில் அமைப்புகளையும் அழைக்கத் துவங்கின; அதற்காக வெளிநாடுகளில் போய், ‘ரோடு ஷோ’ நடத்தவும் செய்தன. தங்கள் மாநிலத்தின் சிறப்புகளை, குறிப்பாக மனித வளம், மண் வளம், தொழில் செய்வதற்கான ஏதுவான காலநிலை, சரக்குகளை ஏற்றியனுப்ப தேவையான துறைமுக, விமான நிலைய வசதிகள், அரசின் கொள்கை ரீதியான, நடைமுறை ரீதியான ஆதரவு நிலைப்பாடுகள் போன்ற பல அம்சங்களை எடுத்துரைத்தன.இதன் விளைவாகத் தான், பல மாநிலங்களில், 18 ஆண்டுகளாக நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகளுக்கு, வருகையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போகிறது; கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கையும் வளர்ந்து கொண்டே போகிறது.பல மாநிலங்கள் இத்தகைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை, பெரிய சாதனைகளாக விளம்பரப்படுத்திக் கொள்வதோடு, அதை தேர்தல் பிரசாரங்களுக்கு பயன்படுத்தவும் தவறுவது இல்லை.எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நடைமுறைக்கு வந்துள்ளன... எத்தனை தொழிற்சாலைகள் அல்லது நிறுவனங்கள் தங்கள் பணிகளை இங்கே துவங்கியுள்ளன? இது தான் முக்கியமான கேள்வி. பல மாநிலங்களிலும் இதற்கான பதில் மகிழ்ச்சியூட்டுவதாக இல்லை. புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்குப் பின், முறையான அனுமதிகள் பெற்று, தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு ஒரு சில ஆண்டுகளேனும் ஆகும். பல இடங்களில் அனுமதிகளைப் பெறுவதிலேயே தடைகள் இருப்பதாக செய்திகள் வருகின்றன.ஆரம்பத்தில் காட்டப்படும் விருப்பம், பிற்பாடு சந்திக்கும் தடைகளால், தேய்ந்து போகும் அனுபவமும் உண்டு. குறிப்பாக, பல மாநிலங்களில் விதிக்கப்படும் வரிகள் தொடர்பான செய்திகள், அன்னிய நாட்டு முதலீட்டாளர்களை தயக்கம் கொள்ள வைக்கின்றன.தொழிலைத் துவங்குவதற்கும், நடத்துவதற்குமான அடிப்படைகளில் ஒன்று அமைதியான சூழல். பல மாநிலங்களில் பெரிய நிறுவனங்கள் கால்கோள் விழா நடத்தும்போதே, உள்ளூர் பிரச்னைகள் தலையெடுக்கின்றன; எதிர்ப்புகள் வலுக்கின்றன. இவற்றை சமாளிக்க வேண்டிய தேவை அந்தந்த மாநில அரசுகளுக்கே உண்டு.இது போன்ற பல பிரச்னைகளை எதிர்கொண்டு, சமாளித்து, தொழில் துவங்குவதற்கு உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தர வேண்டியது, மாநில அரசின் கடமை. இதற்கென அதிகாரமிக்க உயர்மட்டக் குழுஒன்றை நியமித்து, அவர்களுடைய வழிகாட்டு தலில் அனைத்தையும் நெறிப்படுத்த வேண்டும்.ஆனால், பல மாநிலங்களில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப்படுவதில்லை. விளைவு, தொய்வு.சீனாவின் உதாரணத்தை இங்கே பார்ப்பது பொருந்தும். ‘சுந்தரம் பாஸ்டனர்ஸ்’ நிறுவனம், 14 ஆண்டுகளுக்கு முன், சீனாவில் தொழில் துவங்கியபோது, சீன அரசு அத்தனை உதவிகளையும் நேரடியாகச் செய்தது. முழு அதிகாரம் படைத்த ஒரு ஆலோசகரை நியமித்து, தொழில் நிறுவனம் அங்கே செயல்படுவதற்குத் தேவையான அத்தனை உதவிகளையும் மேற்பார்வை பார்த்து நடத்திக் கொடுத்தது.ஒருசமயம், அந்தத் தொழிற்சாலை அமைந்த பகுதியில் மின் வெட்டு ஏற்பட்ட போது, இந்த ஆலோசகர், உள்ளூர் அரசை தனியே ஓர் மின்னுற்பத்தி நிலையத்தை அமைத்து தரச் சொன்னார். தடையற்ற மின்சாரம் தருவோம் என்று சீன அரசு கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவே, இத்தகைய முனைப்புகள்.இது தான், தொழில் துறைக்கு ஆதரவான நிலைப்பாடு என்பது, இந்திய அரசும், மாநில அரசுகளும் இதை கவனத்தில் கொண்டால், தொடர்ச்சியான முதலீடுகள் இங்கே வருவது உறுதி.ஆர்.வெங்கடேஷ்பத்திரிகையாளர்

மூலக்கதை