கண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம்

தினமலர்  தினமலர்
கண்ணாடியாய் பளபளக்கும் சாலை: சந்திரசேகர ராவ் சபதம்

ஐதராபாத்: ''கண்ணாடியை போல், பளபளப்பான சாலைகளை தெலுங்கானாவில் அமைப்போம்,'' என, அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், சபதம் செய்து உள்ளார்.

தெலுங்கானா தலைநகர் ஐதராபாதில் நேற்று, நெடுஞ்சாலைகள் துறை உயரதிகாரிகளுடன், முதல்வர் சந்திரசேகர ராவ் ஆலோசனை நடத்தினார். பின், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தெலுங்கானாவில், நீர்ப்பாசனத்துக்கு அடுத்ததாக, சாலைகள் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும். தெலுங்கானாவில் உள்ள சாலைகளை தரம் வாய்ந்தவையாக மாற்றும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். அடுத்த இரு ஆண்டுகளில், தெலுங்கானாவில் உள்ள சாலைகள் அனைத்தும், கண்ணாடியை போல் பளபளப்பாகும்.

தெலுங்கானாவில், 12 ஆயிரத்து, 751 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இவற்றில் உள்ள சாலைகள் அனைத்தும் தரமானவையாக மாற்றப்படும். தற்போதுள்ள சாலைகளின் நிலையை மதிப்பீடு செய்து, புதிய சாலைகள் அமைப்பதற்கான செலவு மதிப்பீடு செய்யப்படும். பின், இந்த திட்டத்துக்கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்யும். சாலைகள் சரி செய்யும் பணியை தொடர்ந்து கண்காணிக்கும்படி, அமைச்சர்களுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை