மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ-வுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

தினகரன்  தினகரன்
மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏவுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம்

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாஜக பெண் எம்எல்ஏ-வுக்கு தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 1995-ம் ஆண்டு லக்னோவில் உள்ள விருந்தினர்  மாளிகையில், சமாஜ்வாதிக் கட்சியினர் மாயாவதியை தாக்கி அவமரியாதை செய்தனர். ஆனால், இரு கட்சிகளும் தங்களின் முந்தைய பகையை மறந்து, வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டணி அமைத்துள்ளனர்.  இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் சண்டவுலியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பாஜக எம்.எல்.ஏ. சாதனா சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியால் பெண் இனத்துக்கே இழுக்கு ஏற்பட்டு விட்டதாக கூறினார்.  மேலும் மாயாவதியை திருநங்கைக்கும் கீழானவர் என்றும் தெரிவித்துள்ளார்.  மகாபாரதத்தில் திரவுபதியை சுட்டிக் காட்டிய சாதனா சிங், திரவுபதி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டபின், அவர் பழிவாங்கும் எண்ணத்துக்குத் திரும்பினார். ஆனால், மாயாவதி, அனைத்தையும் இழந்துவிட்டார், இப்போது  தனது சுயமரியாதையையும் அதிகாரத்துக்காக விற்கத் துணிந்துவிட்டார். மாயாவதியின் இந்தச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெண் சமூகத்துக்கே மாயாவதி ஒரு கறை என்று விமர்சனம் செய்திருந்தார். மாயாவதி  குறித்து சாதனா சிங் எம்.எல்.ஏ. பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே  பகுஜன் சமாஜ் கட்சியின் சதீஸ் சந்திர மிஸ்ரா கூறுகையில்,  சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்துள்ளதைப் பொறுக்க முடியாமல் பாஜகவினர் பேசுகிறார்கள். வரும் மக்களவைத் தேர்தலில்  தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் நிலைகுலைந்து பேசுகிறார்கள்” என்றார். ஒரு கட்சியின் தலைவரை ஒரு பெண்ணை பற்றி மற்றொரு பெண் இவ்வாறு தரக்குறைவாக விமர்சிப்பது ஏற்க முடியாது,  கண்டிக்கத்தக்கது. இதைதேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து எடுத்துக்கொண்டுள்ளது. சாதனா சிங்குக்கு நாளை அதிகாரப்பூர்வமாக நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கப்படும்? என தேசிய மகளிர் ஆணையத்தின்  தலைவர் ரேகா சர்மா கூறியுள்ளார் என்று தெரிவித்தார்.

மூலக்கதை