மெக்சிகோவில் 'பெட்ரோல் பைப்'பில் தீ: 73 பேர் பலி

தினமலர்  தினமலர்
மெக்சிகோவில் பெட்ரோல் பைப்பில் தீ: 73 பேர் பலி

திலாஹேலில்பன்: மெக்சிகோ நாட்டில், ராட்சத பெட்ரோல் பைப்பில் கசிந்த பெட்ரோலை, மக்கள் பிடித்தபோது ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 73 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வட அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில், அந்நாட்டு பெட்ரோலிய நிறுவனமான, 'பெமெக்ஸ்' பைப்கள் மூலம் பெட்ரோல் வினியோகம் செய்கிறது.கடந்த, 2017ல், இந்நிறுவனத்தின் எண்ணெய் பைப்பில் ஓட்டை போட்டு, பெட்ரோல் திருடி விற்கப்படுவதாக அரசுக்கு புகார் எழுந்தது. இதனால், அரசுக்கு, 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது.இதையடுத்து, மெக்சிகோ அரசு, முக்கிய பைப்லைன்களை மூடி, 'பெமெக்ஸ்' நிறுவனத்துக்கு ராணுவ பாதுகாப்பு வழங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும், கடும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டதால், பெட்ரோல் பங்க்குகளில், மக்கள், நீண்ட வரிசையில், தங்கள் வாகனங்களுடன் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஹிடால்கோ மாகாணத்தில் உள்ள பெட்ரோல் பைப்பில் இருந்து கசிந்த பெட்ரோலை, அப்பகுதி மக்கள் வாளி மற்றும் கேன்களில் பிடித்து சென்றனர். அப்போது, பைப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். 77 பேர் காயமடைந்திருந்தனர். தீ அணைக்கப்பட்ட பின்னர் மேலும் பலர் சடலமாக மீட்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் திருடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை