காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட மாஜி மத்திய அமைச்சர் ராகுலுக்கு மிரட்டல்

தினகரன்  தினகரன்
காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட மாஜி மத்திய அமைச்சர் ராகுலுக்கு மிரட்டல்

புவனேஸ்வர்: ‘‘ஒடிசாவில் மணல் மாபியாக்களுடன் மெகா கூட்டணி வைத்துள்ள ராகுலின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவேன்’’ என காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள்  மத்திய அமைச்சர் காந்த் ஜெனா மிரட்டல் விடுத்துள்ளார்.ஒடிசாவில் கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக முன்னாள் மத்திய அமைச்சரான காந்த் ஜெனா, காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டார். அவர்  நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரும் 25ம் தேதி ஒடிசா வருகிறார். அப்போது அவரின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவேன். அதன்பின் அவர் மக்கள் மத்தியில் தலைகாட்ட முடியாது. என்னை கட்சியிலிருந்து நீக்கியதன் மூலம், இன்னும் மணல்  மாபியாக்களுடன் ராகுல் கூட்டு சேர்ந்திருப்பதை தெளிவுபடுத்தி உள்ளார். ஒடிசா மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் நிரஞ்சன் பட்நாயக், மணல் மாபியாக்கள் பிடியில் சிக்கியிருக்கிறார்.  இதைப் பற்றி பலமுறை ராகுலின் கவனத்திற்கு கொண்டு சென்றேன். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. மற்றபடி கட்சிக்கு விரோதமாக எந்த நடவடிக்கையிலும் நான் ஈடுபடவில்லை.  பிஜூ ஜனதா தளத்துடன் கூட்டணி வைக்க ராகுல் முடிவு செய்திருப்பதன் மூலம், பட்நாயக் குடும்பத்தினருக்கு தான் ஒடிசா முதல்வர் பதவி என நினைத்திருப்பது தெரிகிறது. இவ்வாறு அவர்  கூறினார்.

மூலக்கதை