குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வங்கதேசத்தினர் 187 பேர் மட்டுமே பயனடைவார்கள்: உள்துறை அமைச்சகம் விளக்கம்

தினகரன்  தினகரன்
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வங்கதேசத்தினர் 187 பேர் மட்டுமே பயனடைவார்கள்: உள்துறை அமைச்சகம் விளக்கம்

புதுடெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவால் வங்கதேசத்தினர் 187 பேர் மட்டுமே பயனடைவார்கள் என உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியா வந்த இந்து, சீக்கியர், புத்தமதத்தினர், ஜெயின் மதத்தினர், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு  நீண்ட கால விசா(எல்டிவி) வழங்கப்பட்டு வந்தது. இவர்கள் 11 ஆண்டுகாலம் இந்தியாவில் வசித்திருந்தால் இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.  இதை 6 ஆண்டுகாலமாக குறைத்து, குடியுரிமை சட்ட திருத்த மசோதா  மக்களவையில் கடந்த 8ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.  2014ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை இந்தியா வந்தவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.  இந்த மசோதாவுக்கு  வடகிழக்கு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த 1985ம் ஆண்டு அசாம் ஒப்பந்தப்படி, சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்ற 1971ம் ஆண்டு மார்ச் 24ம்  தேதிதான் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிடும் என வடகிழக்கு மாநிலத் அமைப்புகள் போராட்டம் நடத்தி  வருகின்றன. இந்நிலையில், இது குறித்து பேட்டியளித்த உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கடந்த 2011ம் ஆண்டு முதல் கடந்த 8ம் தேதி வரை வங்கதேசத்தை சேர்ந்த 187 பேருக்கு  மட்டுமே நீண்ட கால விசா வழங்கப்பட்டுள்ளது. இதே காலத்தில் பாகிஸ்தானில் இருந்த வந்த 34,817 பேருக்கு இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்தின் படி வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் அதிக பேர் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்க  முடியாது’’ என்றார்.

மூலக்கதை