விளைநிலங்களில் 'பொட்டு பானை': வறட்சி நீங்கியதால் தென்படும் பாரம்பரியம்

தினமலர்  தினமலர்
விளைநிலங்களில் பொட்டு பானை: வறட்சி நீங்கியதால் தென்படும் பாரம்பரியம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி பகுதியில் விவசாய தோட்டங்களில், நல்ல விளைச்சலை பெற பாரம்பரிய நம்பிக்கையின்படி அமைக்கப்படும் 'பொட்டுப்பானைகள்' காண்பாரை கவர்கின்றன.மனிதர்களின் கண் பார்வைக்கும், எண்ண அலைகளுக்கும் சக்தி இருப்பதாக பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. சில அறிவியல் ஆய்வுகளிலும் மனித மனத்தின், எண்ணங்களின் சக்தி நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த சக்தி, சில நேரங்களில் தீய வழிகளிலும் வேலை செய்யும் என முன்னோர்கள் நம்பினர். அதை, 'கண் திருஷ்டி' என கூறினர். நன்கு விளைந்து நிற்கும் பயிர் மீது பிறரின் திருஷ்டி பட்டால், விளைச்சல் பாதிக்கப்படும் என நம்புகின்றனர். இந்த திருஷ்டிக்கு பரிகாரமாக, பல்வேறு வழிமுறைகள் கையாளப்படுகின்றன. பொள்ளாச்சி பகுதியில் விளை நிலங்களில் 'பொட்டுப் பானை' அமைப்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.மண் பானைக்கு சுண்ணாம்பு அடித்து, அதில் கறுப்பு நிறத்தில் பொட்டுக்களை வரைவர். அந்த பானைகளை மரக்கொம்புகளில் கவிழந்து, விளை நிலத்தில் நட்டு வைப்பர். சிலர், பால் வரும் தாவரங்களை அதில் கட்டி வைப்பர். இது கண் திருஷ்டியில் பயிர்களை காத்து, நல்ல விளைச்சல் கொடுக்கும் என்பது பாரம்பரிய நம்பிக்கை. பொதுவாக, பலரின் பார்வையும் பதியும் இடத்தில், இந்த பொட்டுப்பானைகள் அமைக்கப்படும். பொள்ளாச்சி பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக மழையின்மையால் கடும் வறட்சி நிலவியது. பயிர் சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டது. அதனால், பொட்டுப் பானை அமைப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. இந்தாண்டு, நல்ல மழை பெய்து, வறட்சி நீங்கியதால், பழையபடி பயிர் சாகுபடி களைகட்டியுள்ளது. காய்த்துக் குலுங்கும் விளை நிலங்களில் பொட்டுப்பானைகளும் முளைக்க துவங்கியுள்ளன.

மூலக்கதை