துறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் கிராமங்கள்!

தினமலர்  தினமலர்
துறைரீதியான ஒருங்கிணைப்பு இல்லாததால் இருளில் மூழ்கும் கிராமங்கள்!

பல்லடம்:பல்லடம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்துடன், மின்வாரியம், ஒருங்கிணைந்து செயல்படாததால், பல்லடம் வட்டார கிராமங்கள், இருளில் மூழ்கியுள்ளன.பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, 20 கிராம ஊராட்சிகளில், 300க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள், அவற்றை சார்ந்து, 2.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர்.
குடிநீர், சாக்கடை, தெரு விளக்கு உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளை, ஒன்றிய நிர்வாகம் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில், கிராமங்களில் உள்ள தெரு விளக்குகள், பராமரிக்கப்படாமல், பழுதாகியுள்ளன.புதிய தெரு விளக்கு அமைப்பது, அதற்கான பயன்பாட்டு செலவு உள்ளிட்டவற்றை, ஒன்றிய நிர்வாகம் கையாண்டாலும், பராமரிப்புப்பணியை மின்வாரியமே செய்து வருகிறது.இருப்பினும், மின்வாரியத்துக்கும், ஒன்றிய நிர்வாகத்துக்கும் இடையே ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லை. இதன் பாதிப்பு, பணிகளில் தொய்வு ஏற்படுத்துகிறது. பெரும்பாலான கிராமங்களில், தெரு விளக்குகள் பராமரிக்கப்படாமல், மோசமான நிலையில் உள்ளன. மாத கணக்கில் எரியாமல், மக்கள் இருளிலேயே தங்களின் அன்றாட வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.கிராம மக்கள் கூறியதாவது;தெருவிளக்குகள் மாதக்கணக்கில் பராமரிக்கப்படாமல் இருப்பதால், பல்புகள் உடைந்து தொங்கியபடி, ஆபத்தான நிலையில் உள்ளன. இதுகுறித்து மின்வாரியமோ, ஊராட்சி நிர்வாகங்களோ கண்டுகொள்வதில்லை. ஊராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினால், மின்வாரிய ஊழியர்களின் ஒத்துழைப்பு இல்லை எனக்கூறுகின்றனர்.
எனவே, அடிப்படை வசதிகளை செய்து தருவதில், சம்மந்தப்பட்ட துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, மக்களுக்கான தேவை பூர்த்தியடையும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.பல்லடம் ஒன்றியப்பகுதி மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல இடங்களில் உள்ள ஒன்றியப் பகுதிகளிலும், மின் வாரியத்தினர், ஒன்றிய நிர்வாகத்தினர், நெடுஞ்சாலைத் துறையினர் என, துறை சார்ந்த புரிதல் இல்லை. இதனால், மக்கள் நலன் சார்ந்த பணிகளில் திருப்தியற்ற நிலையே காணப்படுகிறது.எனவே இன்று, மாவட்ட கலெக்டர் தலைமையில் நடக்கும் மக்கள் குறைகேட்பு கூட்டம் மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் மட்டத்திலான ஆய்வு கூட்டத்தில், இதுகுறித்து விவாதித்து,தீர்வு காண வேண்டும் என்பதே 'தினமலர்' எதிர்பார்ப்பு.

மூலக்கதை