5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ்! அரசு மருத்துவமனை அபார சாதனை!

தினமலர்  தினமலர்
5 ஆண்டுகளில் 201 காது ஆபரேஷன் சபாஷ் டாக்டர்ஸ்! அரசு மருத்துவமனை அபார சாதனை!

கோவை:செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனையில் 'காக்ளியர் இம்பிளான்ட்' அறுவை சிகிச்சை, இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. ஐந்தாண்டுகளில் 201 பேருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து, கேட்கும் திறனை அளித்துள்ளது, அரசு மருத்துவமனை. சிகிச்சைக்குப் பின், உரிய பேச்சுப் பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர் என்கிறார், மருத்துவமனை டீன்.இந்தியாவில் பிறக்கும், 1,000 குழந்தைகளில், நான்கு குழந்தைகளுக்கு கேட்கும் திறன் இல்லை என்பது, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
தமிழகத்தில், இந்த எண்ணிக்கை ஆறாக உள்ளது. கோவையில் ஏராளமான குழந்தைகள், இத்தகைய குறைபாடுடன் வாழ்ந்து வருகின்றனர்.நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம், கர்ப்பிணியாக இருக்கும்போது, சாப்பிடும் மருந்துகள், கதிர் வீச்சு, கிருமித்தொற்று உள்ளிட்ட காரணங்களால், குழந்தைகளின் செவிகள் உள்வாங்கும் திறனை இழக்கின்றன.செவித்திறன் குறைபாடு இருப்பதால், குழந்தைகள் பேசுவதில் பிரச்னை ஏற்படுகிறது. இத்தகைய குழந்தைகளின் மூளை செயல்பாடு, நன்றாயிருக்குமென்பதால், காதின் உட்புறம் காதொலிக்கருவியைப் பொருத்தினால், கேட்கும் திறன் கிடைக்கும். இத்தகைய அறுவை சிகிச்சைக்கு 'காக்ளியர் இம்ப்ளாண்டேஷன்' எனப்பெயர்.சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டுமே செய்யப்பட்டு வந்த, இவ்வகை அரிய அறுவை சிகிச்சை, கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 2013ல் துவங்கப்பட்டது. தனியார் மருத்துவமனைகளில் இதற்காக, ஒன்பது லட்ச ரூபாய் வரை கட்டணம் பெறப்படுகிறது.கோவை அரசு மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளில், 201 அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.கோவை அரசு மருத்துவமனை டீன் அசோகன் கூறுகையில், ''செவித்திறன் குறைபாடுள்ள ஏழை குழந்தைகளுக்கு, அரசு மருத்துவமனையில் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. சிகிச்சைக்குப் பின், உரிய பேச்சுப் பயிற்சி அளித்தால், குழந்தைகள் நன்றாக பேசத்துவங்குவர். குறைபாட்டை விரைவாகக் கண்டு பிடிப்பது நல்லது. தற்போதுள்ள உயர் வகை சிகிச்சையின் மூலமாக, 55 வயதிலும் கூட, 'காக்ளியர் இம்பிளான்டேஷன்' செய்ய முடியும்,'' என்றார்.

மூலக்கதை